பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இத்திரைப்படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ‘சர்தார் 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாக உள்ளநிலையில், இதன் முதல்காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.