பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் காவல்துறையால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார். அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, கடப்பிதழ், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார். ஆனால் இல்லாத நாட்டுக்கு அவர் பெயர் சூட்டுவதாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதன் பிறகு ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் தோன்றி உரையாற்றி வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், மரணமடைந்து விட்டார் எனவும் மாறுபட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால் அதன் பிறகு சில நாட்களிலேயே மீண்டும் ஆன்லைனில் தோன்றிய நித்யானந்தா தான் சமாதி நிலையில் இருந்ததாக விளக்கம் அளித்தார். அதன் பிறகு பல்வேறு நாடுகளுடன் கைலாசா நிர்வாகிகள் ஒப்பந்தம், அமெரிக்காவில் சில நாடுகளில் மோசடிக்கு முயன்றது என கைலாசாவை பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொலிவியா நாட்டில் நித்யானந்தா சீடர்கள் மோசடிக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் மீண்டும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேசஸ்வரன் காணொலி கான்பரசிங் மூலம் பிரசங்கம் செய்தார். அப்போது இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் சமாதி அடைந்து விட்டதாக அறிவித்தார். இது நித்யானந்தாவின் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது தொடர்பாக நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் எந்த தகவல்களோ அல்லது மறுப்போ பதிவிடபடவில்லை. இதற்கிடையே நித்யானந்தா வெங்கடேஸ்வர மூர்த்தி பவ சமாதி தரிசனம் என்ற பெயரில் அவர் பெருமாள் வேடத்தில் காட்சி கொடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. எனவே, நித்யானந்தா சமாதி அடைந்ததாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.