தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்திய மூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டுடன் திருத்தணி இணைந்த நாள் இன்று. அதற்காக போராடிய தியாகிகளை நினைவுகூர்ந்து புகழ் அஞ்சலி செலுத்துகிறோம் . வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்கிறார். அவரது வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஏன் இந்த போராட்டம் என்று கேட்கிறார்கள். அடுத்த தலைமுறையை நல்ல முறையில் உருவாக்கும் கல்வித்துறையை சீரழித்து வருவதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 52 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழி கொள்கைகள் தான் உள்ளன. இப்போது தேர்தல் வரும்போது மும்மொழி திட்டத்தை கொண்டு வருவது ஏன்? 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தும் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை.
இவற்றை கண்டித்து தான் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதானமாகவும், பொறுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும். யாரோ வாய்க்கு வந்தபடி கூறியதை கேட்டு அள்ளித் தெளிக்க கூடாது. டிக்கி நிறுவனம் என்பது இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் கழிவுகளை அகற்றி விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளை தேர்வு செய்து அவர்களை தொழில்முனைவோர் ஆக்கியுள்ளனர். இதில் பணியாற்றும் ஒருவர் எனது உறவினர். அவ்வளவுதான் மற்றபடி எனக்கும் இந்தத் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? மேலும் சொல்லப் போனால் உங்கள் பிரதமர் மோடியே இந்த திட்டத்தை பாராட்டி இருக்கிறார். அவர் பாராட்டிய திட்டத்தை அண்ணாமலை தவறு நடந்திருப்பதாக குறை கூறுகிறார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வர வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் அனைத்திற்கும் இதுதான் நிலைமை. அதே போலதான் இந்த திட்டத்திலும் தவறு நடப்பதாக கூறுகிறார். உங்களிடம் விசாரணை அமைப்புகள் உள்ளன. அதன் மூலம் உண்மையை அறிந்து பேச வேண்டும்.எதையும் அரைகுறையாக பேசக்கூடாது. இந்தத் திட்டத்தில் பல மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டது என தேர்வு செய்து மத்திய மோடி அரசு விருது வழங்கி இருக்கிறது. அப்படியானால் தவறாக இந்த விருதுகள் கொடுக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்கிறாரா? இவ்வாறு அவர் கூறினார்.