எந்தவொரு தேர்தலிலும் ”தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம்” என வாக்குறுதி வழங்காத மஹிந்த ராஜபக்ஸ,ரணில்-மைத்திரி நல்லாட்சி ,கோத்தபாய ராஜபக்ஸ அரசுகள் கூட தமிழ் அரசியல் கைதிகளை பலரை விடுவித்துள்ள போதும் ” தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வேன்”எனத் தமிழ்மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய அநுரகுமார அரசு தற்போது அந்த வாக்குறுதியை மீறி அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாதெனக் கூறுவது தமிழ்மக்களுக்கு செய்யும் அப்பட்டமான நம்பிக்கைத் துரோகம்”
கே.பாலா
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் வழக்குகளின்றியும் தண்டனைக்காலம் முடிவடைந்த நிலையிலும் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சிறைகளிலேயே மரணித்துமுள்ளனர் .இவ்வாறானவர்கள் விடுவிக்குமாறு தமிழ் மக்களும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும் பல வருடங்களாக கோரிக்கைகளை விடுத்தும் போராட்டங்களை நடத்தியும் களைத்துப் போய்விட்டனர். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ள மோசமான விதிகளை காரணம் காட்டி தமிழர்களை விடுவிக்க இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசுகள் மறுத்து வந்ததே வரலாறு.
அதே வழியில் தற்போது ஆட்சி பீடத்தில் உள்ள ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட.அதே பயங்கரவாத தடைச்சட்டத்தால் தண்டிக்கப்பட்ட ,பாதிக்கப்பட்ட ,பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஜே .வி.பி. அரசு கூட பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு பலவருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது எனக்கூறி என்னதான் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) என்ற முகமூடியுடன் வந்தாலும் தாங்களும் தலைசிறந்த இனவாதிகள்தான்.ஆயுதம் தூக்கிய சிங்களவர்களான நாம் சுதந்திர போராட்ட வீரர்கள்,ஆயுதம் தூக்கிய தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற இனவாத சித்தாந்தத்தையே இவர்களும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர் .
எந்தவொரு தேர்தலிலும் ”தமிழ்அரசியல் கைதிகளை விடுவிப்போம்” என வாக்குறுதி வழங்காத மஹிந்த ராஜபக்ஸ அரசு, ரணில்-மைத்திரி நல்லாட்சி அரசு-கோத்தபாய ராஜபக்ஸ அரசு கூட தமிழ் அரசியல் கைதிகளை பலரை விடுவித்துள்ளன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது அரசிடம் சரணடைந்த 12000 வரையிலான விடுதலைப்புலிப் போராளிகளை அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசு புனர்வாழ்வளித்து ச மூகத்துடன் வாழ அனுமதித்து விடுவித்தது. கடந்த மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 120 அரசியல் கைதிகள் நீதிமன்றங்களின் மூலமாக விடுவிக்கப்பட்டனர். அப்போது ஜனதிபதியாகவிருந்த மைத்ரிபால சிறிசேனவினால் தன்னை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவர் கூட பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.
அதுமட்டுமல்ல முன்னாள் பாதுகாப்பு செயலரும் ஜனாதிபதியாகவுமிருந்த கோத்தபாய ராஜபக்ஸ அரசில் கூட இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேர் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர். அனுராதபுரம் சிறையிலிருந்து 15 பேரும் யாழ் சிறையிலிருந்து ஒருவருமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் மன்னார் மாவட்டத்தையும் 9 பேர் யாழ் மாவட்டத்தையும் ஒருவர் மாத்தளை மாவட்டத்தையும் சேர்ந்தவர். இந்த 16 பேரில் ஒருவர் முஸ்லிம்.
ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்திற்கு சென்ற ஜே .வி.பி.-என்.பி.பி. தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ”பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை கட்டம் கட்டமாக விடுதலைசெய்வேன்”என வாக்குறுதியை வழங்கியே தமிழ் மக்களிடம் வாக்குகள் கேட்டார். இந்த வாக்குறுதியை நம்பியே தமிழ்மக்களும் அநுரகுமாரவுக்கு வாக்களித்துடன் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ் தேசியக் கட்சிகளைக் கூடப் புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அவர்கள் கோரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் தம்ளர்கள்தான் மாற வேண்டும் நாம் மாற மாட்டோம் என்றவாறாகவே அநுரகுமார அரசு அரசியல் கைதிகள் விடயத்தில் நடந்து கொள்கின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ”பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை கட்டம் கட்டமாக விடுதலைசெய்வேன்”என்று வழங்கிய வாக்குறுதியை தமிழ் மக்கள் நம்பியிருந்த நிலையில்தான் அரசியல் கைதிகள் என எவரும். கிடையாது எனவும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது எனவும் அநுரகுமார அரசின் அமைச்சர்கள் இனவாத முழக்கமிடத் தொடங்கியுள்ளனர்.
இதில் இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என அநுரகுமார அரசின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள்.இவர்களில் சிலருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிலரது வழக்குகள் நீண்டகாலமாகவும், குறுகிய காலமாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன .அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றேன்.அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது என்றும் கூறியுள்ளார். .
அநுரகுமார அரசின் பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க ,அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பும் இல்லை, அவர்களை விடுதலை செய்யவும் முடியாது. தற்போது சிறையில் உள்ளவர்களில் யாரும் வெறும் சந்தேகநபர்கள் அல்ல.அனைவரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம்காணப்பட்டவர்கள் . உரிய நடைமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும். அடுத்ததாக குறித்த சிறைகைதிகள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை.முன்னாள் ஜனாதிபதிகளுடைய கொலை திட்டமிடல்கள், பிலியந்தலை பஸ் குண்டு வெடிப்பு, மத்திய வங்கி குண்டு வெடிப்பு, கண்டி தலதா மாளிகை குண்டு வெடிப்பு, போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.“எனவே அவர்களை விடுதலை செய்வது என்பது இலகுவான விடயமல்ல. எனவே அவர்களுக்கு இதற்கு முன் இருந்த ஜனாதிபதிகள் பொது மன்னிப்பு வழங்கியது போல் பொது மன்னிப்பு வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசு, ரணில்-மைத்திரி நல்லாட்சி அரசு-கோத்தபாய ராஜபக்ஸ அரசு தமிழ் அரசியல் கைதிகளை பலரை விடுவித்த போது பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளில் ஒன்றாகவிருந்த இந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. கட்சி எந்தவொரு எதிர்ப்பினையும் வெளிப்படுத்தவில்லை. கடந்து வருடம் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் வடக்கு மாகாணத்திற்கு வந்து ” தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்” என்றவர் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் பிரசார மேடையிலும் அதே வாக்குறுதியை வழங்கினார் . ஆனால் தமிழர் வாக்குகளுடன் ஆட்சிபீடம் ஏறியபின்னர் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறியவர்கள் இப்போது தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது அதற்கு பல சட்ட வழிமுறைகள் இருக்கின்றன என்று கூறுவது ஏன்?
ஜே .வி.பி.யினர் தேர்தலுக்கு முன்பாக கூறியதும் தேர்தலுக்கு பின்பாகக் கூறியதும் ஆட்சி பீடத்திலிருந்து கூறுவதும் நேரெதிர் கருத்துக்களாகவே உள்ளன.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்க்கட்சியில் இருந்தபோது எதிர்க்காத ஜே .வி.பி.-என்.பி.பி.யினர் இன்று ஆட்சி பீடத்திலிருக்கும்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது. இதற்கு முன்பிருந்த ஜனாதிபதிகள் பொது மன்னிப்பு வழங்கியது போல் பொது மன்னிப்பு வழங்க முடியாது என்று கூறுவது ஏன்?ஆயுதம் தூக்கி போராடியதால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் வலிகளையும் கொடுமைகளையும் அனுபவித்து பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட ஜே .வி.பி.-என்.பி.பி.யினர்,அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் உரத்துக்கு குரல் எழுப்பிய ஜே .வி.பி.-என்.பி.பி.யினர், இன்று அதே பயங்கரவாத தடைச்சட்டத்தின் வலிகளையும் கொடுமைகளையும் பலவருடங்களாக சிறைகளில் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுப்பது ஏன்?
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள அதாவது 225 பாராளுமன்ற ஆசனங்களில் 159 ஆசனங்களை தன்வசம் கொண்டுள்ள ஜே .வி.பி.-என்.பி.பி.அரசு தான் நினைத்த எதனையும் செய்யக்கூடிய,தான் கொண்டுவரும் எந்தத் சட்டமூலத்தையும் நிறைவேற்றக்கூடிய பலத்துடன் இருக்கும் நிலையில், அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதை தற்போதுள்ள எந்தவொரு எதிர்க்கட்சியும் எதிர்க்காத நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது அதற்கு பல சட்ட வழிமுறைகள் இருக்கின்றன எனக் கூறுவது அநுரகுமார அரசின் இனவாத முகத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.
எந்தவொரு தேர்தலிலும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என வாக்குறுதிவழங்காத மஹிந்த ராஜபக்ஸ , ரணில்-மைத்திரி நல்லாட்சி -கோத்தபாய ராஜபக்ஸ அரசுகள் கூட தமிழ் அரசியல் கைதிகளை பலரை விடுவித்துள்ள போதும் ”பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அரசியல் கைதிகளை கட்டம் கட்டமாக விடுதலைசெய்வேன்”என வாக்குறுதி வழங்கிய அநுரகுமார அரசு தற்போது அந்த வாக்குறுதியை மறந்து அல்லது மீறி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாதெனக் கூறுவது தமிழ்மக்களுக்கு செய்யும் அப்பட்டமான நம்பிக்கைத் துரோகம்.”மாற்றம்” ஏற்படுத்துவோம் என பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஜே .வி.பி.-என்.பி.பி .தமது இனவாத கொள்கையில் ”மாற்றம்”ஏற்படுத்தாததை அல்லது ஏற்படுத்த மறுப்பதனை தமிழ் மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் .அதனை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்