மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து சர்ச்சை வசனம் இடம் பெற்றதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை நினைவு கூரும் வகையிலும், இந்துக்கள் குறித்தும் இந்த திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்த திரைப்படத்தை 4 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் கோகுலம் நிதி நிறுவன அதிபர் கோகுலம் கோபாலகிருஷ்ணனும் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இவருடைய கோகுலம் நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது. அதன்பேரில் அப்போது இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு வருமான வரித்துறை சார்பில் தகவல் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.
கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இந்த புகாரின் அடிப்படையில் அவருடைய கொச்சி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நீலாங்கரையில் உள்ள கோபாலகிருஷ்ணனின் இல்லமும் அமலாக்கத்துறை சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. இந்த நிலையில் கோகுலம் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.