நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.727 கோடியில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: நாங்கள் உழைப்பது, இந்தியா முழுமைக்கும் சமூக நீதி மாநில சுயாட்சி, கூட்டாட்சி மத நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கருத்துக்களை வென்றெடுக்கத்தான். அதனால் தான் நம் கழக எம்.பி.க்கள் எல்லோரும் மக்களவையில் மாநிலங்க ளவையில் எடுத்து வைக்க கூடிய வாதங்கள் இந்தியா வையே காப்பாற்றக் கூடிய அளவுக்கு அமைந்து உள்ளது. இதைப் பார்த்து இப்போது என்ன செய்கிறார்கள்?
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற எண்ணிக்கையை குறைக்க சதி செய்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மிகப் பெரிய சதி நடக்க இருப்பதை முதன் முதலில் உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தான் நம்முடைய தமிழ்நாடு. வர இருக்கக் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பு நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகுது. மக்கள் தொகையை பல்வேறு பல திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும். இதைப்போல தென் மாநிலங்களும் தொகுதி எண்ணிக்கையை இழப்பார்கள். உடனே இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினேன். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இது போல பாதிக்கப்படும் மாநிலங்களை இணைத்து சென்னையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. 7 மாநிலங்களை சார்ந்த 22 கட்சிகள் அதில் கலந்து கொண்டார்கள்.
அந்த கூட்ட முடிவின்படி அகில இந்திய அளவிலான கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்து உள்ளோம். அந்த குழுவின் சார்பில் பிரதமர் மோடியை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். பிரதமர் விரைவில் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம். நீலகிரி விழாவில் கலந்து கொள்வதால் ராமேசுவரம் விழாவில் என்னால் பங்கேற்க முடியாத நிலைமை. இந்த சூழ்நிலையை அவருக்கு நான் தெரிவித்து விட்டேன். அந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலமாக உங்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு வரும் மோடியை, நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும். தென்மாநிலங்கள் உள் ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என்ற உறுதி மொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் வழங்க வேண்டும். அதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும். இது ஏதோ தொகுதி எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, நம் அதிகாரம், உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய கவலை.
இந்த எண்ணிக்கையும் குறைந்தால் தமிழ்நாட்டையும் நசுக்கி விடுவார்கள். அதனால்தான் நம் வலிமையை குறைக்க பா.ஜ.க. துடிக்கிறது. வக்பு வாரிய திருத்த சட்டத்தை நள்ளிரவு 2 மணிக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றியதை பார்த்திருப்பீர்கள். தொடக்கம் முதல் தமிழ்நாடு அரசும் தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்தோம். வக்பு திருத்த சட்டம் ஜனநாயகத்துக்கு விரோத மான முறையில் நிறை வேற்றப்பட்டு உள்ளது. இதில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை 1 நிமிடம்தான் பேசினார். ஆனால் நாங்கள் சட்ட மன்றத்தில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தோம். தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளேன். துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பெயரில் வழக்கு தொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.