ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் வணக்கம் என தமிழில் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். அப்போது ராம நவமி நன்னாளில் ஸ்ரீராம் என முழக்கமிடுங்கள் என பிரதமர் கூறிய உடன் அனைவரும் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். விழாவில் அவர் மேலும் கூறியதாவது: ராம நவமி நாளில் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ராமேஸ்வரம் பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி, அறிவியலும் ஆன்மீகவும் இணைந்தது தான் வாழ்வு என்பதை நினைவுபடுத்துகிறது. தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. சற்று நேரம் முன்புதான் அயோத்தியா ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பன் பாலத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள். பாம்பன் பாலம் தான் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரெயில் பாலம். பாம்பன் பாலப்பணிகள் பல ஆண்டுகளாக நடந்தாலும் அதனை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை. ராமேஸ்வரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரெயில் சேவை கிடைப்பதன் மூலம் வளர்ச்சி மேம்படும் என பிரதமர் நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை இயங்கும் ரெயில் மூலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு போன்றவை அதிகரிக்கும். நாட்டின் பல துறைகளின் செயல்பாடுகளை 6 மடங்கு உயர்த்தி உள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
