வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள நிர்வாக மையங்களில் அதிகளவு சிங்களவர்களை நியமிப்பதில் தற்போதைய அநுர அரசும் அதி தீவிரம் காட்டுகின்றது. முன்னைய அரசாங்கங்களிலும் மிகவும் முனைப்பான முறையில் இந்த ‘திட்டத்தை’ அமுல் செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் அறியப்படுகின்றது.
இதில் குறிப்பாக முதலில் கிழக்கு மாகாணமே குறிவைக்கப்படுகின்றதோடு அது வடக்கிற்கும் காய் நகர்த்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கின் பல்கலைக்கழகத்தின் பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டமை இதற்கு முதல் உதாரணமாகும். அங்கே
5 தமிழ் உறுப்பினர்களும் 3 முஸ்லிம் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளதனால் ஒரு முஸ்லீம் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் வெளிவாரிப் பேரவையின் முடிவு அதுவாக மாறும்.
இதேபோன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும் நீக்கவும் அதிகாரமுள்ள பேரவையில் சிங்கள உறுப்பினர்கள் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த இருக்கின்றார்கள் இங்கே கிழக்கு பல்கலை கழகத்திற்கு மிக விரைவில் சிங்கள துணைவேந்தர் ஒருவரை நியமிக்க இருக்கின்றார்கள் எனவும் அபாயச் சங்கு ஊதப்படுகின்றது.
கிழக்கில் இந்த நிலையெனில் வடக்கும் இதற்கு விதிவிலக்கல்ல குறிப்பாக வவுனியா பல்கலைக்கழக பேரவையின் 7 வெளிவாரி உறுப்பினர்களில் இம்முறை 3 சிங்கள உறுப்பினர்களும் 3 தமிழர்களும் 1 முஸ்லிம் பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுள்ளனர் இங்கும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நிலை ஏற்பட்டுவிட்டது.
சிங்கள மயமாகி விடுமோ என அஞ்சப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் பேரவையின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்
இது எதிர் காலத்தில் எந்த நிலையை இட்டுச் செல்லும் என்பதும் கேள்விக்குறிதான். நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என ஜே.வி.பி என்றுமே விரும்பி வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த அரசு ஆளுநரை தமிழராக வைத்திருந்நமோதும் அநுர அரசு அதனை சிங்களவராக மாற்றியது . பிரதம செயலாளரும் சிங்கள அதிகாரியே நியமிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்கள அதிகாரியே நியமிக்கப்பட்டுவிட்டார்.
நேர்மையான சமாந்தரமான நிர்வாகத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சகதி அரசு இரகசியமாக சிங்களத் தேசியவாதிகளின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றதற்கு இவை சிறந்த உதாரணங்கள்.
இத்தனைக்கும் மத்தியில் அநுர அரசில் எந்தவொரு இட ஆக்கிரமிப்புக்கள், திணிப்புக.கள் இடம்பெற மாட்டாது என அநுரா கூறியதை நம்பியே பலர் அக் கட்சிக்கு வாக்களித்தபோதும் திருகோணமலை குச்சவெளியில் வாழும் 431 குடும்பத்திற்காக 28 பௌத்த ஆலயம் உள்ளபோதும் அநுரா ஆட்சி பீடம் ஏறிய பின்பும் 3 பௌத்த ஆலயம் முளைத்திருப்பதாக அப் பகுதி மக்கள் மட்டுமல்ல தமிழ் அரசுக் கட்சியும் இதனை பாரதப் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
கிழக்கின் நிர்வாக நிலை இதுஎனில் வடக்கின் நிர்வாக நிலை வெளித் தெரியாத அபாயக் கட்டத்திலேயே உள்ளது அன்றி அவ்வாறே பேணுவதற்கு தற்போதைய அரசு விரும்புகின்றது. வவுனியா மாவட்டத்தில் சிங்கள ஆக்கிரமிப்புகளை அதிகம் எதிர்கொள்ளும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றிய பிரதேச செயலாளர் இடமாற்றலாகிச் சென்றதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதியவரை நியமிக்காது அங்கே பணியில் இருந்த நிர்வாக சேவை தரம் 3ஐச் சேர்ந்த உதவிப் பிரதேச செயலாளரான சிங்கள அதிகாரி பதில் பிரதேச செயலாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இங்கே நிரந்தரமாகவும் ஓர் சிங்கள அதிகாரி பிரதேச செயலாளராக நியமிக்க பட இருக்கின்றார். இவ் நியமனங்கள் ஊடாக ஏற்கனவே சிங்கள மயப்படும் வவுனியா வடக்கு தமிழ் கிராமங்களின் எல்லைக்கோட்டின் வழி நகர்ந்து மணலாறு சிங்கள குடியேற்றங்களை இணைத்து சிங்கள ஆக்கிரமிப்புக் குடியேற்றத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றார்கள் என்பது திடமாகின்றது.
அரசாங்கத்திற்கு கீழ் இயங்கும் 52 அரச நிறுவனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைமை பதவி நியமனத்தில் எந்தவொரு தமிழ் அதிகாரிகளுக்கும் இடம் வழங்கப்படவில்லை. அநுர அரசாங்கத்தின் அமைச்சுக்களின் 27 செயலாளர்களில் இருவர் மட்டுமே தமிழர்கள். அத்துடன்
50 நாடுகளில் இயங்கும் இலங்கைக்கான தூதரகங்களில் தலைமை பதவிகளில் எந்தவொரு தமிழ் அதிகாரியும் கிடையாது. ஏன் ஜனாதிபதி அனுரா குமார திஸ்ஸநாயக்க நியமித்துள்ள கிளீன் சிறிலங்கா செயலணியில்கூட ஒரு தமிழ் அதிகாரி கிடையாது.
தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுல்லா ஆலோசனை சபையிலும் தமிழர் கிடையாது.
இத்தனைக்கும் மத்தியிலும் வடக்கு கிழக்கில் அநுர அரசிற்கு அதிகாரிகள் வால் பிடிக்காமல் இல்லை ஏனெனில் தலை அல்லாவிடினும் வால் ஏதும் கிடைக்கும் என்ற நப்பாசை விடவில்லை. இதேசமயம் வடக்கின் பிரதம செயலாளர் எதிர் வரும் 3 ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளதனால் அந்த இடத்திற்கு ஒருவரை ஆளுநர் பரிந்துரைத்தாலும் ஆளும் கட்சியின் வடக்கின் நாட்டாமை அதற்கு இடமளிக்க மாட்டார் என்றே தெரிகிறது. ஏனெனில் வடக்கின் பிரதம செயலாளராக வருபவர் தகுதியானவராக இருப்பாரோ இல்லையோ அரசிற்கு தலையாட்டியாக இருக்க வேண்டும் என்றே அரச தரப்பினர் விரும்புகின்றனர். இதனால் அரசிற்கும் ஆளுநருக்குமான நெருக்கத்தில் நெருடல் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.்ஏற்கனவே யாழ்ப்பாணம் அரச அதிபர் விடயத்தில் அரசுடன் நல்ல மனநிலையில் இருக்கும் ஆளுநர் இவ் விடயத்திரும் தோற்றுப்போவாராக இருப்பின் அப்பதவியை தக்க வைப்பார் என பலரும் நம்பவில்லை