பு.கஜிந்தன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் 05.04.2025 சனிக்கிழமை அன்றைய தினம் மு.ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் களவிஜயம் செய்தார்கள்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களைச் சந்தித்தார்கள். இதன் போது மாணவர்களை வரவேற்று உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள்,
அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமைமேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல் வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார்.
மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக நிர்வாக் கட்டமைப்புகள், இலங்கை நிர்வாக சேவைகள் மற்றும் ஏனைய பதவிகளின் விபரங்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவரும் கொடுப்பனவுகள், சமுர்த்தி வேலைத்திட்டம் மற்றும் மீளக்குடியமர் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, பட்டம் பெற்றவுடன் தனியே அரசாங்க வேலைகளை மட்டும் தங்கியிருக்காமல் தனியார் துறைகளிலும் தொழில் முயற்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்து வாழ்த்தினார்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்களை அரசாங்க அதிபர் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.