பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்’. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்’ கடந்த 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘எம்புரான்’ திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. முன்னதாக மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ சாதனையை ‘எம்புரான்’ திரைப்படம் முறியடித்துள்ளது. இதற்கிடையே எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் படத்தில் சில காட்சிகளும் நீக்கப்பட்டன.
அண்மையில் எம்புரான் திரைப்படத்தை திரையரங்கில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டு ரசித்தார். இந்நிலையில், மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், “எம்புரான் படத்தில் வரும் ஒரு சிறு காட்சிகளை வைத்து பாஜக, சங் பரிவார் அமைப்புகள் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர் ஆனால் எம்புரான் கம்யூனிசம் படம் கிடையாது” என்று தெரிவித்தார்.