கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கி கவனிக்க வைத்தவர், நெல்சன். ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘ஜெயிலர்’ படம் மூலம் முன்னணி இயக்குனராகவும் உயர்ந்து நிற்கிறார். இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள நெல்சன், தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்கி வருகிறார். ‘ஜெயிலர்-2’ படத்துக்கு பிறகு நெல்சன் யாரை இயக்க போகிறார்? என்று எதிர்பார்ப்பு எழுந்தது. அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருடன் நெல்சன் கைகோர்ப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை ஜூனியர் என்.டி.ஆரும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர்., ‘நெல்சன் இயக்கத்தில் படம் நடிக்க ஆசைப்படுகிறார். நாக வம்சி (முன்னணி தயாரிப்பாளர்) மனது வைத்து வேகமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்’, என்றார். இதன் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். – நெல்சன் கூட்டணியில் புதிய படம் உருவாக போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
