மதுபான வழக்கை வேறுமாநிலத்தில் விசாரிக்க பயமா என தி.மு.க. அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மதுபானம் தொடர்புடைய வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுத்தாக்கல் செய்யவில்லை.
மதுபானம் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்குமாறு தான் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தோம். ஜெயலலிதா ஊழல் வழக்கைதான் வேறு மாநிலத்தில் விசாரிக்க அவர்கள் கோரினர். மதுபான வழக்குகளை பார்த்து தி.மு.க. அரசு பயப்படவில்லை. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. மதுபான முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்போம். இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை குறித்து பேசவேயில்லை. முதலமைச்சர் கடிதம் மூலமாக வலியுறுத்தியும் மீனவர் பிரச்சனை குறித்து பிரதமர் பேசவில்லை.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை என்றார்.