நடிகர் அர்ஜுன் இயக்கும் புதிய படத்தின் பதாகை வெளியாகியுள்ளது. நடிகர் அர்ஜுன் சமீப காலமாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார். இந்நிலையில் நடிகரும் தன் உறவினருமான துருவா சார்ஜாவை நாயகனாக வைத்து புதிய படத்தை அர்ஜுன் இயக்குகிறார். இப்படத்திற்கு, ‘சீதா பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், கிரி என்கிற கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறார். தமிழில் ஜெயஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட வெற்றிப்படங்களை அர்ஜுன் இயக்கி நடித்திருந்த நிலையில் அவர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
