அமெரிக்கா, கடந்த 2-ந்தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதமும், சீன பொருட்களுக்கு கூடுதல் 34 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது. இதன்மூலம் சீன பொருட்களுக்கான வரி 54 சதவீதமாக உயர்ந்தது. பல்வேறு நாடுகளும், தங்கள் நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்காக அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. உலக அளவில் வர்த்தகப் போருக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்தனர். பதிலடியாக சீனா, அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரியை அதிகரிக்க உள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்க பொருட்களுக்கான வரிவிகிதம் வரும் 10-ந்தேதி முதல் 67 சதவீதமாக உயர உள்ளது. இந்தநிலையில் விரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க பங்குச் சந்தையும் வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக இந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்புடனான இருதரப்பு சந்திப்பின் போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னை மீண்டும் ஒருமுறை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததற்காக அதிபருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஒரு குறிப்பிடத்தக்க நண்பர். அவர் எங்கள் கூட்டணியின் சிறந்த ஆதரவாளர், மேலும் அவர் சொல்வதைச் செய்கிறார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை நாங்கள் நீக்குவோம். அதை மிக விரைவாகச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். இது சரியான செயல் என்று நாங்கள் நினைக்கிறோம், மேலும் இஸ்ரேல் பல நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகச் செயல்பட முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.