மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
மேற்கு வங்காள அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற் படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்,காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, அதிபர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையை நீதித்துறை ரத்து செய்ததைத் தொடர்ந்து வேலை இழந்த ஆயிரக்கணக்கான தகுதிவாய்ந்த பள்ளி ஆசிரியர்கள் விஷயத்தில் கருணையுடன் தலையிடக் கோரி, இந்திய அதிபர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சேர்ப்பின் போது செய்யப்படும் எந்தவொரு குற்றமும் கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். இருப்பினும், நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை கறைபடிந்த ஆசிரியர்களுக்கு இணையாக நடத்துவது கடுமையான அநீதியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.