வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் கோப்பாய் மிக முக்கியபகுதியும் யாழ்ப்பாண நகரத்தின் விளிம்பு நகரமும் ஆகும். இதுமட்டும் அல்லாது கல்வியியற்கல்லூரி, கோப்பாய் ஆசிரியப்பயிற்ச்சிக்கல்லூரி என கல்விச்சிறப்புமிக்க தலங்களையும் கொண்டுள்ளது,
இங்கு உள்ள பிரதேச வைத்தியசாலை முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இருப்பது இதன் முக்கியத்துவத்தையும் தேவையினையும் அதிகரிக்கின்றது ஏனெனில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து எட்டு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருப்பதால் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு துணையாக செயற்படக்கூடிய தன்மை கொண்டதாகவும் யாழ்பாண வைத்திய சாலையில் பணிபுரிந்து இடமாற்றம் பெற்ற மூத்த சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் பணிபுரியும் இடமாகவும் உள்ளது.
மேலும் மயிலிட்டியில் காசநோய்க்கான சிகிச்சைவழங்கிய வைத்திய சாலை யுத்தகாலத்தில் மூடப்பட்டபின் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையிலேயே இன்றுவரை அப்பிரிவு இயங்கிவருவதும் முக்கியமானதாகும். இத்தகைய சிறப்புமிக்க வைத்திய சாலையில் அவசரசிகிச்சைப் பிரிவு ஒன்றின் தேவை பற்றி கலந்துரையாடப்பட்டு அதற்கான உதவி IMHO USA நிறுவனத்திடம் கோரப்பட்டதன் நல்விளைவாக 6 மாதகாலப்பகுதிக்குள் அவசர சிகிச்சைப்பிரிவு புனரமைக்கப்பட்டு உபகரணத் தொகுதிகள், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு 03/04/2025 அன்று அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO-USA) தலைவி Dr.இராஜம் தெய்வேந்திரன் அம்மையார் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
IMHO தலைமை செயலணி உறுப்பினர் Dr.தெய்வேந்திரன் அவர்களும், மாகாண சுகாதார பணிப்பாளர் Dr. கேதீஸ்வரன் அவர்களும், IMHO வதிவிட பிரதிநிதி முத்து இராதாகிருஷ்ணன், IMHO இணைப்பாளர் ஜி.கிருஷ்ண குமார் , துஷாந்தன், மற்றும் கோப்பாய் பிரதேச வைத்திய அதிகாரி Dr.சிவகோணேஸ்வரன், மற்றும் வைத்திய சாலை நலன்புரிச்சங்க செயலாளர் ஏனைய மூத்த உறுப்பினர்கள் ஏனைய வைத்தியர்கள், தாதியினர் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் ஆத்மார்தமாக பங்குபற்றினர்.
இங்கு பேசிய Dr.இராஜம் அம்மணி இலவசக்கல்வியின் மூலமாக தாம் அடைந்த வைத்திய தகுதியை இந்நாட்டு மக்களுக்கு பயன்படுத்தவேண்டியே புலம்பெயர்ந்த நாடுகளில் தாம் பணிபுரிந்த போதும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பினை உருவாக்கி அதற்கூடாக இத்தகைய கைங்கரியங்களை செய்ய முடிகின்றது எனக்கூறினார்.