தமிழ் சின்னத்திரையில் “லொள்ளு சபா” என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் ஆண்டனி. இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் சந்தானத்துடன் பல எபிசோடுகளில் ஒன்றாக நடித்துள்ளார் ஆண்டனி. சந்தானம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்ததும், ‘தம்பிக் கோட்டை’ உள்ளிட்ட சில படங்களில் சந்தானத்தின் நண்பராக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்டனி, அதற்காக தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சந்தானம் மற்றும் நடிகர் சேஷு உள்ளிட்ட சிலர் உதவினர். இந்தநிலையில் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காலை சிகிச்சை பலனின்றி ஆண்டனி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
