இந்தியப் பிரதமர் இலங்கைக்கு நான்காவது தடவையாக வந்திருக்கிறார்.ஆனால் நான்கு தடவைகளும் அவர் நான்கு வேறு இலங்கை ஜனாதிபதிகளைச் சந்தித்திருக்கிறார்.ஆனால் இந்த நான்கு விஜயங்களின்போதும் மாறாத முக்கியமான விடயம் என்னவென்றால், தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடுதான். இந்தியா தொடர்ந்தும் இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலான 13ஆவது திருத்தத்தை வலியுறுத்துவதாகத் தெரிகிறது.13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், அல்லது யாப்பில் இருப்பதை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயங்களில் மாறாத விசயம் அது.
மேலும் இந்தியப் பிரதமரின் வருகைகளின் விளைவாக மாறாத மற்றொரு விடயமும் உண்டு. அதுதான் மீனவர்களின் பிரச்சினை.அதுவும் தமிழ் மக்களோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைதான்.
இப்படிப் பார்த்தால் 2009க்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடுகளில் குறிப்பிட்டுச் செல்லக் கூடிய மாற்றங்கள் இல்லை.சில ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பிரதமர் “கூட்டுறவுச் சமஸ்டி” என்ற வார்த்தையை இந்திய நாடாளுமன்றத்தில் பிரயோகித்தார். அவருடைய அரசாங்கத்தின் பிரதானிகளில் ஒருவராகிய அமைச்சர் அமித் ஷா இலங்கைத்தீவில் நடந்தது இன அழிப்பு என்று ராமேஸ்வரத்தில் வைத்துச் சொன்னார். மேலும்,ஐநாவில் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்போது கடந்த முறை இந்தியா வாக்கெடுப்பைத் தவிர்த்தது. இவை தவிர 13வது திருத்தத்தை வலியுறுத்தும் விடையத்திலும் இலங்கை தீவில் தமிழர்களையும் சிங்களவர்களையும் இந்தியா சமதூரத்தில் வைத்துக் கையாள்கிறது என்ற தோற்றத்தை வெளிக்காட்டும் விடயத்திலும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணுகுமுறைகளில் மாற்றம் இல்லை.
அப்படித்தான் தமிழ்த் தரப்பிலும் தமிழரசுக் கட்சி சம்பந்தர் சொன்னதைத்தான் திரும்பத் திரும்பக் கூறுகிறது. மற்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இங்கு தமிழரசுக் கட்சியை விடவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக முன்னணியின் 13க்கு எதிரான கோஷம் அல்லது 13 க்கு எதிரான அரசியல் என்பது உணர்ச்சிகரமான வெகுசன அரசியல் பரப்பில் அவர்களை இந்தியாவிற்கு எதிரானவர்களாகத்தான் அடையாளப்படுத்தி வந்திருக்கின்றது. எனினும் இலங்கை இந்திய உடன்படிக்கை தொடர்பில் அக்கட்சி இந்தியாவின் பிராந்திய நலன்களை தமிழ் நோக்கு நிலையில் இருந்து பாதுகாப்பது என்ற விடயத்தில் தொடர்ச்சியாக ஒரே நிலைப்பாட்டோடுதான் காணப்படுகின்றது.
இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பில் அதாவது இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாடுகள் தொடர்பில் முன்னணி சரியான நிலைப்பாட்டையே தொடர்ந்தும் எடுத்து வந்திருக்கிறது.
கடந்த வாரம் இந்திய பிரதமரின் வருகைக்கு பின் கஜேந்திரகுமார் வழங்கிய பேட்டிகளிலும் அதை அவர் மீள உறுதிப்படுத்தியிருக்கிறார்… “இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு மட்டும்தான் அதன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒரு பார்வை – பங்களிப்பு – உரித்து – இருக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்று அங்கீகரிக்கின்றோம்… வேறு எந்த நாட்டுக்கும் தங்களுடைய தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இலங்கையை அணுகும் உரிமையோ, அருகதையோ இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்தினோம்….இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு என்ற அம்சத்தில் இலங்கைத் தீவு இந்தியாவுக்கு மற்றைய நாடுகளை விட முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டைக் குறிப்பிட்டோம்….விசேடமாக வடக்கு, கிழக்கில் அந்த உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என்பதை இந்தச் சந்திப்பில் சொன்னோம்….”இது அக்கட்சியைச் சேர்ந்தவர்களால் பகிரப்படும் ஆவணத்தில் காணப்படுவது.
அதாவது இந்தியாவின் பாதுகாப்பு நோக்குக் கோணத்தில் இருந்து இந்திய இலங்கை உடன்படிக்கையை முன்னணி ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தத்தை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா 13ஐ வலியுறுத்தி வருகிறது. 13 ஏற்கனவே இலங்கையின் யாப்பில் இருப்பது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் 13 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது. கடந்த 38 ஆண்டுகளாக அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், இலங்கைத்தீவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் தமது நிறைவேற்று அதிகாரங்களை 13ஐ அமல்படுத்தாமல் விடுவதற்குத்தான் பயன்படுத்துகிறார்கள்.அதாவது யாப்புக்கு எதிராகவே நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டதோர் அபகீர்த்தி மிக்க யாப்புப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாடு 38 ஆண்டுகளின் பின்னரும் யாப்பை முழுமையாக அமல்படுத்தும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றதா?
13ஆவது திருத்தம் இந்தியாவின் குழந்தையும்தான். எனவே அதனை முழுமையாக அமல்படுத்துமாறு குறிப்பாக கடந்த 15ஆண்டுகளாக கொழும்பின் மீது ஏன் இந்தியாவால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியவில்லை?அப்படிப் பார்த்தால் 13ஆவது திருத்தம் என்பது இலங்கைத்தீவில் இந்தியாவின் இயலாமையைக் குறிக்கும் ஒரு யாப்பு ஏற்பாடு என்றும் சொல்லலாம். கடந்த 15 ஆண்டுகளாக தன்னால் முடியாமல் போன ஒரு விடயத்தை இந்தியா தொடர்ந்து ஏன் வலியுறுத்தி வருகின்றது? தமிழர்களுக்காக கொழும்பைப் பகைப்பதற்கு இந்தியா தயாரில்லாமல் இருப்பதன் ஒரு குறிகாட்டியாக இதை எடுத்துக் கொள்ளலாமா?
இப்பொழுது நாட்டை ஆள்வது சீன சார்பு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்ததும் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்ததுமாகிய ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆகும். ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டம் எனப்படுவது முழுக்க முழுக்க இந்தியாவுக்கு அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிரானதுதான். 38 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பின் தலைவர் கடந்த வாரம் இந்திய பிரதமரின் முன் பணிவாக ஒரு மாணவனைப்போல நின்றார்.
பிரதமர் மோடியும் அனுரவும் ஒன்றாக நிற்கும் ஒளிப்படங்களிலும் சரி காணொளிகளிலும் சரி அனுர ஒரு பணிவான தம்பியைப்போலதான் காணப்படுகிறார். அது நடிப்பா அல்லது இயல்பா என்பதை வரலாறு சொல்லும். ஆனால் 38 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்திய ஒரு கட்சி இப்பொழுது ஆளுங்கட்சியாக வந்தபின் தலைகீழாக நிற்கின்றது.
இதுதான் அரசியல். அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது; எதிரிகளும் கிடையாது. சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு. அந்தத் தரப்பு வெளிஅரசுகளுடன் அதன் அணுகுமுறைகளில் வீரம் காட்டவில்லை. விவேகம் தான் காட்டுகின்றது.
அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களும் அவ்வாறான விவேகமான அணுகுமுறைகளுக்குப் போக வேண்டும். அதாவது ஓர் அரசுபோல சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதன் பொருள் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல. இன அழிப்புக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதும் அல்ல. அரசுகளின் அரங்கில் ஓர் அரசைப் போல சிந்தித்து காய்களை நகர்த்த வேண்டும் என்பதுதான்.
நாங்கள் நீதியாக இருக்கிறோம்; எங்கள் பக்கம் நீதி இருக்கிறது; என்பதற்காக உலகம் எங்களிடம் நீதியாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது.ஓர் ஆபிரிக்கப் பழமொழி உண்டு “நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாமல் விடாது” என்று. அதுதான் அரசியல். சிங்கங்கள் இரை தேடும் உலகில்தான் தமிழ் மக்கள் நீதிக்காகப் போராட வேண்டியிருக்கிறது.