உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை. டென்மார்க் அதன் கனடாக் கிளையோடு இணைந்து நடத்திய ‘தமிழரங்கம்’ இணையவழி நிகழ்ச்சியில் ‘மாதவி வரைந்த மாண்புறு கடிதங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஆசிரியை நாகேஸ்வரி குமரகுரு தெரிவிப்பு
“இளங்கோ அடிகளின் படைப்பிலக்கியமான ‘சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரங்களான கண்ணகி.கோவலன். மாதவி மற்றும் வசந்தமாலை ஆகிய பாத்திரங்களில் நடனப் பெண் என்று அறியப்பெற்ற மாதவியானவள் பன்முக ஆற்றல் கொண்டவளாக விளங்கினாள். இவ்வாறான மாதவி அறிவும் ஆடலில் திறமையும் பாடக்கூடிய குரலழகும் அழகும் நிறைந்தவளாய் கோவலனுக்கு எழுதிய கடிதங்களை நாம் இலக்கியங்களாக நோக்கலாம். தனது முதலாவது கடிதத்தை கோவலனுக்கு எழுதிய அவள் கோவலனின் பதிலுக்காகக் காத்திருந்த வேளை அவன் அந்தக் கடிதத்தை கொண்டு சென்ற வசந்தமாலையிடமிருந்து பெற்றுக்கொள்ள மறுத்து விட்டான். ஆனால் தனது முயற்சியை கைவிடாமல் மாதவி மீண்டு இரண்டாவது கடிதத்தை எழுதுகின்றாள். இந்தக் கடிதம் தான் தமிழில் படிக்கப்பெற்ற முதலாவது கடிதம் எனடறு சங்க இலக்கியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவி எழுதிய கடிதங்கள் ஆழமான கருத்துக்களையும் அழகிய சொற்களையும் கொண்டிருந்தன. தனது முதலாவது கடிதத்தில் காதல் உணர்வை வெளிக்காட்டிய மாதவி பின்னர் தனது இரண்டாவது கடிதத்தை ஒரு தந்தைக்கோ அன்றி ஒரு அண்ணனுக்கோ அன்றி ஒரு ஆசிரியருக்கோ எழுதுவது போன்று வரைந்தாள்.
மாதவியின் அந்த இரண்டாவது கடிதம் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தது”
இவ்வாறு மேற்படி ‘தமிழரங்கம்’ இணையவழி நிகழ்ச்சியில் ‘மாதவி வரைந்த மாண்புறு கடிதங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஆசிரியை நாகேஸ்வரி குமரகுரு தெரிவித்தார். அவர் மாதவிக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். அவ்வேளையில் இணைய வழி நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் மாதவிமீது கொண்ட மரியாதை அதிகரித்திருக்கும் என்றே கூறலாம்.
கடந்த 30-03-2025 ஞாயிற்றுக்கிழமையன்று உலகெங்கும் பலநாடுகளிலிருந்து கலந்து கொண்ட கலை இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இந்த தமிழரங்கம் நிகழ்வில் நீண்ட நேரம் பங்கெடுத்தனர்.
உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை. டென்மார்க் அமைப்பின் நிறுவுனரும் தலைவருமான திருமதி முல்லைநாச்சியார் தனது உரையில் டென்மார்க் தேசத்தில் ஆரம்பிக்கப்பெற்ற இந்த அமைப்பு தற்போது உலகெங்கும் தமிழ் ஆர்வலர்கள் வாழும் நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது என்றும் இன்றைய நிகழ்வானது கனடாக்கிளையின் ஆதரவோடு கனடா வாழ் கலை இலக்கிய ஆர்வலர்களும் இளைய தலைமுறை மாணவ மாணவிகளும் பங்கெடுத்துள்ளமை பாராட்டுக்குரியது என்றார்.
வரவேற்புரை நிகழ்த்திய கனடா வாழ் இலக்கியவாதியும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தனது உரையில் உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து இளையோர் பலர் தங்கள் படைப்புக்களை இந்த நிகழ்வில் சமர்பிக்க முன்வந்தமை பாராட்டுக்குரியது என்றார்
மேற்படி ‘தமிழரங்கத்தில்’ கனடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மாணவ மாணவிகள் நடனங்கள் மற்றும் பாடல்களை வழங்கினர். அத்துடன் ‘நான் தமிழ் படிக்க விரும்புகின்றேன்’ என்ற தலைப்பில் ஒரு அணியினரும் ‘நான் தமிழ் படிக்க விரும்பவில்லை’ என்ற தலைப்பில் எதிர்த் தரப்பு அணியினரும் கலந்து கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. அதற்கு நடுவராக செல்வி ஆராதணி இராஜ்குமார பணியாற்றினார்.. மேலும கலாநிதி கவிதா சிவாகரன் இராஜரட்ணம் அவர்கள் ‘இன நல்லிணக்கமும் இலங்கைத் திருநாடும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தொடர்ந்த முனைவர் வாசுகி நகுலராஜா அவர்கள் நிகழ்ச்சி பற்றி தொகுப்புரையை வழங்கினார்.—