ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் திரிஷா, பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, பிரபு, பிரியா வாரியர், சிம்ரன், ஜாக்கி ஷரோப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. திரையரங்க வளாகத்திற்குள் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தும் கேக் வெட்டியும் மேளதாளத்துடன் அதிகாலை முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இப்படத்தின் வரவேற்பு குறித்து ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “படத்திற்கு கொடுத்த அற்புதமான வரவேற்புக்கும் பின்னணி இசைக்கு கொடுத்த சிறப்பான வரவேற்புக்கும் நன்றி. படம் பிளாக்பஸ்டர். அனைவருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
