கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டை பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் பட்டியலின மாணவி கடந்த வாரம் பூப்பெய்தியுள்ளா். பள்ளியில் தற்போது முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 7 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்ற அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளை எழுத மாணவி பள்ளிக்குச் சென்றுள்ளார்.
பூப்பெய்திய மாணவியை தீட்டாக கருதி பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதுகுறித்து அறிந்து பள்ளிக்கு சென்ற மாணவியின் தாய், தனியாக அமர்ந்து தேர்வு எழுதிய மகளை கண்டு மனம் பதறியுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, “இங்கு இப்படித்தான் நடக்கும். விருப்பம் இல்லையென்றால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவியை வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் மனு அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பள்ளி முதல்வரை இடைநீக்கம் செய்து பள்ளியின் தாளாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.