– ஐங்கரன் விக்கினேஸ்வரா
மெல்பேர்ணில் கந்தையா நாகேந்திரம் அவர்களின் சிறுகதை தொகுப்பான ‘வாத்தியார்’ எனும் நூல் ஞாயிற்றுக்கிழமை 13/4/25 மாலை 300 மணிக்கு மெல்பேர்ண், மவுண்ட் வேவளி சமூக மண்டபத்தில் ( Mount Waverley Community Centre Hall) அறிமுக விழா நடைபெற உள்ளது.
இந்நூல் வெளியீட்டின் வரவேற்புரையை ஈகல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் செ. வாசுதன் தொகுத்து வழங்குவார்.
நிகழ்வின் தலைமை உரையை இணை பேராசிரியர் கலாநிதி ஸ்ரீகௌரிசங்கர் அவர்கள் வழங்குகின்றார். இந் நூல் வெளியிட்டு நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆர்வலர்களும் பங்கு பற்றி உரையாட உள்ளனர்.
வாத்தியார் சிறுகதை நூல் அறிமுக உரை வி இளங்கோ அவர்களும், புத்தக மதிப்பாய்வு உரையை சண்முகம் சந்திரன் அவர்கள் ஆற்றுவார்.
அத்துடன் நூலின் ஏற்புரையை ஆசிரியர் கந்தையா நாகேந்திரம் அவர்களும், நன்றி உரையை ஈகல்வி நிறுவன செயலளர் வே இரவீந்திரன் அவர்களும் உரையாடுவர்.
கணித ஆசிரியரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீக விஞ்ஞான பட்டதாரியான கந்தையா நாகேந்திரம் தனது ஆசிரியர் பட்டப் பின் படிப்பை நியூசிலாந்தில் பெற்றுக்கொண்டார். ஆரம்ப காலங்களில் இலங்கை, சாம்பியா ஆகிய நாடுகளில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.
கற்பித்தலின் மீது இருந்த ஈர்ப்பினால் இருபது வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் உயர் பாடசாலை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். கருத்துக்களையும் சிந்தனைகளையும் எழுத்தாக்கி, சமுதாயத்தில் விதைக்கும் ஆசிரியர், தனது பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் கேந்திர மையத்தன்மை கொண்டவர்.
தனது சொற்பிரயோகங்களை நகைச்சுவையுடனும், அன்புடனும், தேவையாயின் ஆயுதமாகவும் கையாள்பவரின் எழுத்துகளில் இத்தகைய தன்மைகள் வெளிப்படுகிறது.
இந்நூலின் ஆசிரியர் தனது கதைகளில் வாழ்வியல் தத்துவங்களை வலியுறுத்தி, தான் கூறவந்த கருத்துக்களை வாசகர்களின் மனதில் அழிக்க முடியாத வகையில் துல்லியமாக வடித்துள்ளார்.
மனித உறவுகள், வர்க்கம், சாதி தொடர்பான சமூக பிரச்சனைகளை முன்வைத்து, எளிய உரைநடையில் சமுதாயத்தின் பல்வேறு அடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரங்களின் மூலம் தனது சிறுகதைகளை படைத்துள்ளார்.