ந.லோகதயாளன்.
இழுவைமடியை தடை செய்து இலங்கையிலே சட்டத்தை இயற்றியுள்ளோம் அதேபோல் இந்தியாவிலும் சட்டமாக்கப்பட வேண்டும் எனக் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியதாக தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு தாஜ்சமுத்திரா விடுதியில் கடந்த வாரம் தினம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் சந்திப்பின் பின்னரான ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கே அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
சந்திப்பின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் தலைவர்களாக நீண்ட காலம் சேவையாற்றிய இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோருக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்ததோடு கடந்த கால சந்திப்புக்களில் அவர்களும் பங்குகொண்டதை பிரதமர் மோடி நினைவுபடுத்தினார்.
“இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தமிழர்களின் பிரச்சணைக்கு தீர்வு இருக்க முடியும் என்பதனை நாங்கள் நம்புகின்றோம். ஓர் அர்த்தமுள்ள அதகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதிலே பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அதாவது 13 ஆம்திருத்தம்கூட முழுமையாக அமுல்படுத்தவில்லை. இரு அரசும் ஏற்றுக்கொண்ட ஓர் விடயம். 2010, 2011, 2012 ஆம் ஆண்டு ஆகிய மூன்று தடவைகள் இலங்கை இந்தியாவின் கூட்டறிக்கையிலும் 13ஐ கட்டி எழுப்பி அதன் மேல் ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்தை உருவாக்குவோம் எனச் சொல்லப்பட்டிருக்கின்றது அது இன்னமும் செய்யப்படவில்லை.
இவற்றை ஓர் புதிய அரசியல் யாப்பின் மூலமோ அல்லது என்ன விதத்திலும் ஓர் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். எமது கட்சியைப் பொறுத்த மட்டில் நாம் ஓர் சமஸ்டிக் கட்சி. ஓர் சமஸ்டி முறையில்தான் அர்த்தமுள்ள அதகாரப் பகிர்வு இருக்கும் என நம்புகின்றோம் அந்த இலக்கை அடையும் வரையில் தற போதுள்ள மாகாண சபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாகாண சபைகளிற்கான தேர்தல் நடாத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது அது உடனடியாக நடாத்தப்பட வேண்டும். இதனை பாரதப் பிரதமர் மோடியும. கூறியுள்ளார். அதற்கும் நன்றி தெரிவித்தோம்.
மாகாண சபைத் தேர்தலை பிற்போட அரசு எத்தனிப்பதாக நாம் சந்தேகின்றோம் அது உடனடியாக நடாத்தப்பட வேண்டும் இந்தியா மட்டும்தான் இலங்கைத் தமிழர் விடயத்தில் எப்படியான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசோடு இணங்கி ஓர் சர்வதேச ஒப்பந்தம் இன்றுவரை அமுலில் உள்ளது. அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பாரம் இந்தியாவின் இடத்திலே இருக்கின்றது நாம் இந்தியாவிடம் அதனை எதிர்பார்க்கின்றோம் எனச் சொன்னோம்.
இதேபோன்று எங்களது மக்களின் நிலங்கள் அபகரிக்கும் விடயங்கள், இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றது அதற்கான உதாரணங்களையும் கூறினோம். அப்படியான நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்குமான தொடர்பாடல் அதற்காக இராமேஸ்வரம் ஊடான படகுச் சேவை பலாலி விமான சேவை போன்று வலுப்பெற வேண்டும். இந்திய மூலதனங்கள் இலங்கைக்கு வர வேண்டும் இந்தியாவிலே தற்போது அகதிகளாக வாழும் ஈழத் தமிழ் மக்கள் மீளக் குடியமர்வதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும்.
இதேபோன்று இலங்கை இந்திய மீனவர்ள் பிரச்சணை மிக முக்கியமான பிரச்சணையாக இந்தியப் பிரதமரிடம் கூறியுள்ளோம். இழுவைப் படகு முறைமை சுற்றுச் சூழலிற்குப் பாதகமானது அது தடுக்கப்பட வேண்டும் என்று சுஸ்மா சுவராச் தலைமையில் டில்லியில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது 2016இல் இணக்கம் எட்டப்பட்டு கூட்டறிக்கையும் உண்டு. இணங்கிய விதமாக இந்த இழுவைப் படகு முறை முற்று முழுதாக தடுக்கப்பட வேண்டும். இலங்கையிலே சட்டத்தை இயற்றியுள்ளோம் இந்தியாவிலும் சட்டமாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். மீனவர்களின் பாதிப்புத் தொடர்பில் சித்தார்த்தன், கஜேந்திரகுமார் ஆகியோரும் எடுத்துரைத்தனர். அவர்களும் அரசியல் தீர்வு தொடர்பிலும் வலியுறுத்தினர் என்றார்