இ.மி.சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பணிப்பு
கூரைமேல் சூரிய ஒளி மின்சார இணைப்பு வழங்கும் போது, புதிய இணைப்பு மற்றும் கட்டமைப்புக்கான நிறுவுதலுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதையும் கோர முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு கூரைமேல் சூரிய ஒளி மின்சார இணைப்பு அனுமதிக்காக விண்ணப்பித்த போது, அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, முறைப்பாட்டாளருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில், இலங்கை மின்சார சபை கூரைமேல் சூரிய ஒளி மின்சார இணைப்பு அனுமதி வழங்கும் போது, அந்தந்தப் பகுதிகளுக்கான மேலதிக புதிய இணைப்பு மற்றும் கட்டமைப்புக்கான நிறுவுதலுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதையும் கோர முடியாது என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு மீண்டும் பணித்திருக்கிறது.
இதேநேரம், சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சூரிய ஒளி மின்சார இணைப்பு அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலர் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார் என்று முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.