”இந்தியாவுக்கு அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பி.யின் இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இழக்க வைக்கத் தொடங்கியிருக்கின்றது என்பது ஜே .வி.பி.யில் உள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை சினமடைய வைத்துள்ள நிலையில்தான் அண்மைய இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே .வி.பி.- என்.பி.பி க்குள் புகைந்து கொண்டிருந்த முறுகலை, பிளவுகளை தீவிரப்படுத்தி விட்டுள்ளது”
கே.பாலா
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)- தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.)ஆகியவற்றின் தலைவரும் தீவிர இந்திய எதிர்ப்புணர்வாளரும் இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க, தான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் முதல் நாடாக இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் இலங்கையில் ஏற்படுத்திய அதிர்வலைகளை விடவும் கடந்த 4 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் ஜே .வி.பி. -என்.பி.பி. அரசு மீது அதிக எதிர்ப்பலைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தியாவுக்கு எதிரான ஜே .வி.பி.யின் கொள்கை தொடர்பிலான கேள்விகளையும் எழுப்பியுள்ளதுடன் ஜே .வி.பி.-என்.பி.பி. கட்சிகளுக்குள் முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவித்துள்ளது.
ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய எதிர்ப்புணர்வில் உறுதியாகவிருந்த கட்சி.அதாவது ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிரான அதேவேளை இந்தியாவிற்கு எதிரான சீனாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் கட்சியாகவே செயற்பட்டது.அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் எதிர்த்ததுடன் அதன் அப்போதைய தலைவர் றோஹண விஜேவீர தலைமையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி.யின் இன்றைய முன்னணித் தலைவர்களில் பலர் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஜே .வி.பி.யில் இணைந்தவர்கள்.
இலங்கையின் வடக்குக்கு ‘அமைதி காக்கும் படையை’ அனுப்பிவைக்க கைச்சாத்திடப்பட்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் பேரினவாத அடிப்படையில் எதிர்த்தஜே.வி.பி., இந்தியா, இலங்கையை பிரிக்கத் திட்டமிடுவதாகக் கூறி அதற்கு எதிராக ஆயுத கிளர்ச்சி மற்றும் படுகொலை வன்முறைகளை முன்னெடுத்தது. வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டது இதன் விளைவாக சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 37 வருடங்களுக்கு முன்னர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது, இராணுவ அணிவகுப்பு மரியாதையில் விஜயமுனி என்ற கடற்படை அதிகாரி தாக்க முற்பட்ட சம்பவம் பதிவாகி இருந்தது.இந்தநிலையில் குறித்த நபர் ஜே.வி.பி. பின்னணியை சேர்ந்தவர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.அக் காலப்பகுதியிலேயே குறிப்பாக ஜே.வி.பி.யினுடைய ஊடுருவல் இலங்கையின் முப்படைகளிலும் ஆழமாக இருந்த நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இத்தாக்குதலில் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையிலேயே அண்மையில் இலங்கை வந்த இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கான இராணுவ அணி வகுப்பு மரியாதையில் மோடியின் பாதுகாப்பு பிரிவினர் முன்னெச்சரிக்கையாக அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடிக்கு பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.
இவ்வாறு ஜே .வி.பி.யின் படுகொலைகள்,வன்முறைகள் உச்சம் தொட்ட நிலையில் ஜனாதிபதியாக பிரேமதாச பதவியேற்றபின்னர் இரும்புக்கரம் கொண்டு ஜே .வி.பி.அடக்கப்பட்டது ,அழிக்கப்பட்டது. இதன்பின்னர் ஜே.வி.பி. தலைமைத்துவம் 1994இல் மீண்டும் ஒன்றுகூடி, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன், அதன் சோசலிச வாய்ச்சவடால்களை பெருமளவில் கைவிட்டுவிட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தத்தை ஆதரித்ததுடன், தம்மை ஒரு பாராளுமன்றக் கட்சியாக மாற்றிக்கொண்டது. இவ்வாறான நிலையில்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வடக்கு,கிழக்கு இணைப்பை நீதிமன்றத்தினூடாக பிரித்ததுடன் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்து தமிழ் மக்களுக்கு எதிரான இறுதி அழித்தொழிப்பு யுத்தத்தை ஆரம்பிக்கவும் முன்நின்றது.
போருக்கான அதன் ஆதரவு மற்றும் பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களில் அதன் பங்கேற்பு அல்லது அரசியல் ஆதரவளிப்பினால் மதிப்பிழந்து போன ஜே.வி.பி. 2015 இல் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஸ்தாபித்தது. ஜே.வி.பி.யின் கடந்த கால ஆயுத வன்முறை ,படுகொலை அடையாளத்தில் இருந்து விலகிக் கொள்ளும் நோக்கிலேயே, அநுரகுமாரவும் அவருக்கு ஆலோசனைகளை வழங்கும் புலமையாளர்களும் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியைப் போட்டுக் கொண்டார்கள்.சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றையும், கல்வியாளர்களையும் புதிதாக இணைத்துக் கொண்டு தேசிய மக்கள் சக்தியாக உருமாறி கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று இன்று ஆட்சியாளர்களாகியுள்ளனர்.
ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் இருந்த ஜே .வி.பி. – என்.பி.பி. ஆகியவற்றின் கொள்கைகளும் பிரசாரங்களும் கொடுத்த வாக்குறுதிகளும் ஆட்சி பீடமேறிய பின்னர் ஒட்துமொத்தமாக தலைகீழானதே இன்று இவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவதற்கும் இவர்களின் ஆதரவாளர்கள் விசனப்படுவதற்கும் காரணமாகியுள்ளது.அதிலும் இந்தியாவின் எதிர்ப்புணர்வாளர்களாகவே தம்மை இறுதிவரை காட்டி வந்த இவர்கள் இன்று இந்தியாமீது கொண்டுள்ள தீவிரமான காதல் இவர்களின் கொள்கை .இரட்டைவேடம் தொடர்பிலான பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அத்துடன் ஜே .வி.பி.யில் இன்றுமுள்ள சில தீவிர இந்திய எதிர்ப்புணர்வாளர்களினால் ஜே .வி.பி.- என்.பி.பி. கட்சிகளிடையில் பிளவுகளும் முறுகல்களும் ஏற்பட்டுள்ளதை அண்மைய இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயம் வெளிப்படுத்தியுள்ளது.
மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.)- தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் தனது முதல் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்கு சென்றமை ஜே.வி.பி. – என்.பி.பி.க்கிடையில் புகைச்சலை ஏற்படுத்தியது.ஜே.வி.பி. யில் தற்போதுமுள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் விஜயமாக சீனாவுக்கு செல்ல வேண்டுமென விரும்பியபோதும் வலியுறுத்தியபோதும் அயல்நாடு என்றவகையில் இந்தியாவுக்கு முதலில் செல்ல அநுரகுமாரவுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன் அதற்கான அழுத்தமும் இந்தியாவினால் கொடுக்கப்பட்டது. இதனால்தான் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களை ‘இந்திய விரிவாக்கத்தின் ஐந்தாம் படையின் கருவி’ என்று முன்னர் கூறிவந்த ஜே.வி.பி.யின் தலைவர் அதே இந்தியாவுக்கு முதல் மரியாதை செலுத்த வேண்டியேற்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்த இந்திய விஜயம் தொடர்பில் ஜே .வி.பி.க்குள் எதிர்ப்பலைகள் எழுந்ததுடன் நாட்டிலும் அநுரகுமார அரசுக்கு எதிரான விமர்சனங்கள் ,விசனங்கள் கிண்டல்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில் அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தையும் அவரது உயர்மட்ட கலந்துரையாடல்களையும் அவரது கட்சிக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக தேசிய மக்கள் சக்தி வெளிக்காட்டி பிரசாரங்களை முன்னெடுத்தது. புதுடில்லிக்கான அவரின் மூன்று நாள் விஜயத்தின் சந்திப்புக்கள், பேச்சுக்கள். ஒப்பந்தங்கள் தேசிய மக்கள் சக்தி, அதன்ஆதரவு ஊடகங்கள், தரப்புக்களினால் நியாயப்படுத்தப்பட்டன, பாராட்டப்பட்டன.ஆனால் மறுபுறம் இந்தியா தொடர்பிலான ஜே.வி.பி.யின் கடந்தகால கடும் போக்கும் தற்போதைய மென்போக்கும் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகின.
இவ்வாறு இந்தியாவுக்கு அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பி.யின் இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இழக்க வைக்கத் தொடங்கியிருக்கின்றது என்பது ஜே .வி.பி.யில் உள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை சினமடைய வைத்துள்ள நிலையில்தான் அண்மைய இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே .வி.பி.க்குள் புகைந்து கொண்டிருந்த முறுகலை, பிளவுகளை தீவிரப்படுத்தி விட்டுள்ளது. இதன் வெளிப்பாடுகளாகவே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்வு ,இராப்போசன விருந்துபசாரம் போன்றவற்றை ஜே .வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முக்கிய அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்.
அண்மையில் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி , அதானியின் கொழும்புமேற்கு துறைமுக அபிவிருத்தி ,திருகோணமலை துறைமுக மேம்பாடு குறித்தும் அதன் அறிவிப்பை இந்திய பிரதமர் வரும்போது வெளியிடலாமென்றும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டபோது அவற்றையெல்லாம் நிராகரித்து ,அப்படிச் செய்யமுடியாதென கூறி அந்த கூட்டத்தில் இருந்தே வெளியேறியிருந்தார் ஜே .வி.பி அமைச்சர் ஒருவர்.இன்று நாடொன்றின் பிரதமரையே கூடி நின்று வரவேற்கமுடியாத நிலைமை ஜே .வி.பி.-என் .பி.பி.அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
மோடியின் இந்த விஜயத்தின்போது இலங்கை மற்றும் இந்தியா இடையே பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன .இலங்கைக்கு புலனாய்வுத் தகவல் வழங்குவது , திருகோணமலையில் சக்த்திவாய்ந்த ராடர் ஒன்றை நிறுவுவது ,இலங்கை கடல் படைக்கு பயிற்சி, விமானப் படைக்கு பயிற்சி மற்றும் விமானங்களை வழங்குவது என்று 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் இலங்கை இடையில் கைச்சத்திடப்பட்டுள்ளது.இதனூடாக ஒட்டு மொத்தத்தில் மோடி இலங்கையை வளைத்து கைக்குள் போட்டுள்ளார் .சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்கான முழு நடவடிக்கையில் இறங்கிய மோடிக்கு இது பெரும் வெற்றி அளித்துள்ளது.இதுவே ஜே .வி.பி. யிலுள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை கொதி நிலை அடையவைத்துள்ளது
இதனையடுத்துத்தான் இலங்கை பிராந்தியத்தின் பாதுகாப்பை நாம் நிறுவ வேண்டும். அதற்கு இந்தியா போன்ற நாடுகளின் உதவியைப் பெற வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கட்சியினருக்கும் நாட்டுமக்களுக்கும் சேர்த்து விளக்கமளித்துள்ளார்.காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஏற்கனவே நடந்து வரும் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி முறைப்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.இந்தியாவுடனான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.இந்தியாவுடனான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறது.நாம் முன்னேறுவதற்கு மிகவும் முன்னேறிய நாடுகளின் ஆதரவு அவசியம் .கொழும்பு பாதுகாப்பு மாநாடு மற்றும் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்றவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஒரு சர்ச்சை உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. பிராந்திய பாதுகாப்பை நாம் நிறுவ வேண்டும். மேம்பட்ட மற்றும் திறமையானவர்களின் உதவியைப் பெற வேண்டும். இல்லையெனில், நாம் முன்னேற முடியாது என்றும் அநுரகுமார கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசுக்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்கள். ஆனால், சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் . எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது என்று ஜே .வி.பி.யின் பொதுச்செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எமது அயல் நாட்டின் தலைவர் நரேந்திர மோடி நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுச் சென்றுள்ளார்.ஆனால், எதிர்க்கட்சியினர் சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாக தற்போது குற்றஞ்சாட்டுக்கின்றார்கள். அரசு நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை.அவர்கள் காட்டிக்கொடுத்தவற்றை நாமே நிறுத்தியுள்ளோம். ரணில் விக்ரமசிங்க மில்கோ நிறுவனத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தார்.
ஆனால், நாம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம். நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்பட்ட மில்கோ நிறுவனம் தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.திரிபோஷா நிறுவனம் விற்பனை செய்யப்படவிருந்தது. ஆனால், தற்போது திரிபோஷ உற்பத்தியை மேற்கொண்டு அதனை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம்.இதுவே எமது முயற்சியாகும். அதேபோன்று மஹவ – ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ – அனுராதபுரம் ரயில் பாதை சமிக்ஞை கட்டமைப்பு ஆரம்பத்தில் இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது இந்திய பிரதமர் இந்தத் திட்டங்களை அன்பளிப்பாக வழங்குவதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று இந்தியாவிடம் இருந்து நாம் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளோம்.தற்போது இந்தக் கடனுக்கான வட்டியைக் குறைப்பதாக இந்தியப் பிரதமர் மோடி எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முறியடித்து நாம் சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.எனவே, எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்
ஆகவே இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசில் முரண்பாடுகளையும் பிளவுகளை ஏற்படுத்திவிட்டுள்ளதுடன் அதனை வெளியுலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கித்தவித்து வரும் நிலையில் தற்போதைய இந்தியப்பிரதமரின் இலங்கை விஜயத்திற்கும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் ஜே .வி.பி.யினரின் உள்ளம் கவர்ந்த சீன அரசு காட்டப்போகும் பிரதிபலிப்புக்கள் இலங்கையில் இந்திய -சீன தலையீடுகளின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தவே போகின்றன.