எல்லைக்கிராம மக்களின் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் மகிழ்ச்சி என்கிறார் ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி தொடக்கம், தென்னமரவடி பறையனாற்றுப் பாலம்வரையிலான வீதி சிரின்மையால் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், தென்னமரவடி பகுதி விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.
இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தொடர்கோரிக்கையயினையடுத்து குறித்த வீதியை சீரமைக்கும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந் நிலையில் அப்பகுதி விவசாயிகளின் அழைப்பை ஏற்று குறித்த பகுதிக்கூச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவசாயிகளோடு இணைந்து சீர்செய்யப்படவுள்ள குறித்த வீதியைப் பார்வையிட்டிருந்தார். இதன்போது அப்பகுதி விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் எல்லைக்கிராம விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் ஏறத்தாள 90வீதமானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்துவருகின்றனர்.
இந் நிலையில் இப்பகுதிகளிலுள்ள மக்களின் பெரும்பாலான விவசாயக் காணிகள் கடந்த கால இனவாத அரசுகளின் காலத்தில் பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு இப்பகுதிகளிலிருந்த தமிழ்மக்கள் இராணுவத்தினரால் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு இராணுவத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும்போது, தற்போது பெரும்பான்மையின மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக வயல் காணிகளில் நெற்செய்கை மேற்கொண்டிருந்ததாகவும், தம்மால் செய்கைபண்ணப்பட்ட நெல்லினை அறுவடை செய்யாமலேயே தாம் அங்கிருந்து இடம்பெயர்ந்ததாகவும் அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூழலில் தம்மால் செய்கைபண்ணப்பட்ட குறித்த நெற்செய்கைகளை பெரும்பான்மை இனத்தவர்கள் அறுவடைசெய்ததாகவும், அதனைத்தொடர்ந்து ஆமையன்குளம், மறிச்சுக்கட்டிக்குளம், முந்திரிகைக்குளம் உள்ளிட்ட தமிழ்மக்களின் பல பூர்வீக நீர்ப்பாசன நெற்செய்கை நிலங்கள் பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்பட்டதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு தமிழ்மக்களுடைய மானாவாரி நெற்செய்கை நிலங்கள் பலவற்றையும் பெரும்பான்மையின மக்கள் ஆக்கிரமித்து நெற்பயிற்செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாறானதொரு பாரிய ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் இப்பகுதித் தமிழ் மக்கள், பலத்த போராட்டங்களுக்கு மத்தியில், ஆக்கிரமிப்பிலிருந்து தப்பியுள்ள தமக்குரிய பூர்வீக மானவாரி நெற்செய்கை நிலங்களில் நெற்பயிற்செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக சிவந்தாமுறிப்பு, வெள்ளைக்கல்லடி, எரிஞ்சகாடு, சகலாத்துவெளி, நாயடிச்சமுறிப்பு, இறம்பைவெளி, மேல்காட்டுவெளி, கொக்குமோட்டை, பாலங்காட்டுவெளி, கீழ்காட்டுவெளி, ஆத்திமோட்டைவெளி, காயாமோட்டைவெளி, கன்னாட்டி, குறிஞ்சாடி, பெரியவெளி, பணிக்கவயல், அக்கரவெளி, மாரியாமுனை உள்ளிட்ட பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் தமிழ்மக்கள் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த நெற்பயிற்சைநிலங்களுக்கு சென்றுவருவதற்காக தமிழ் மக்கள் பயன்படுத்தும் வீதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.
எனவே நெற்பயிற்செய்கைக்காலத்தில் விவசாய உள்ளீடுகளை எடுத்துவருவதிலும், அறுவடைக்காலத்தில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லினை எடுத்துச் செல்வதிலும் இப்பகுதி விவசாயிகள் பலத்த இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக கடந்த பெரும்போக நெல் அறுவடையின்போது, அறுவடைசெய்த நெல்லினை எடுத்துவருவதில் பாரி சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தனர். அறுவடைசெய்யப்பட்ட நெல்மூட்டைகளை வெள்ளநீர் மூடிய அவல நிலைகளும் ஏற்பட்டன. வீதிச் சீரின்மையால் நீண்டதூரம் நெல்மூட்டைகளை சுமந்து செல்லும் நிலைக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனைவிட படகுகளினூடாகவும் நெல்மூட்டைகள் எடுத்துவரப்பட்ட நிலமைகளும் காணப்பட்டன. இவ்வாறு வீதி சீரின்றிக் காணப்படுவதால் அறுவடைசெய்யப்பட்ட நெல்லை எடுத்துவருவதற்கு மாத்திரமே பாரியளவில் பணம் செலவிடப்பட்டு விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்ற, நட்டமடைகின்ற நிலைகள் காணப்படுகின்றது.
இத்தகைய சூழலில் குறித்த வீதியை சீரமைத்துத் தருமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், வடமாகாண ஆளுநர் ஆகியோரிடமும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இந்த வீதி சீரமைப்பு தொடர்பில் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், வடமாகாண ஆளுநர் ஆகியோர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டிருந்தனர்.
இத்தகைய சூழலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கின்ற எல்லைக் கிராமத் தமிழ் மக்களின் வயல் நிலங்களுக்குச் சென்று வருவதற்குரிய ஏறத்தாள 16கிலோமீற்றர் தூரமான வீதியைச் சீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் அப்பகுதி விவசாய அமைப்புக்களின் அழைப்பையேற்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சீரமைக்கப்படவுள்ள குறித்த வீதியைப் பார்வையிட்டதுடன், விவசாயிகளுடனும் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது வீதிச் சீரமைப்பிற்கு தொடர்ச்சியாக உரிய இடங்களில் குரல்கொடுத்தமைக்கு அப்பகுதி விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வீதி அமைக்கப்படவேண்டுமென்ற எனது தொடர்ச்சியான கோரிக்கைக்கு செவிசாய்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த வீதிச் சீரமைப்பு விடயத்தில் கரிசனையோடு செயற்பட்ட வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோருக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அந்தவகையில் கட்டங்கட்டமாக இந்த வீதியைச் சீரமைப்பதாக உரியவர்களால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக கோட்டைக் கேணியிலிருந்து, நாயடிச்சமுறிப்பு வரையிலும், அடுத்த கட்டமாக நாயடிச்சமுறிப்பிலிருந்து பறையனாற்றுப் பாலம் வரையிலும் வீதியைச் சீர்செய்வதெனத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக உரியவர்களால் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டள்ளது.
இவ்வாறாக இந்த வீதி சீரமைக்கப்படுவது இப்பகுதி தமிழ் மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். தற்போது இப்பகுதியில் ஏறத்தாள 3000ஏக்கர்வரையில் மானாவாரி பயிற்செய்கை நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.
இந் நிலையில் குறித்த வீதிச் சீரமைப்பையடுத்து இன்னும் மேலதிகமாக 1000ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் விவசாயிகள் நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும்.
எனவே இவ்வீதியைச் சீரமைப்பதற்குரிய அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ள சூழலில், விரைந்து இவ்வீதியைச் சீரமைப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் – என்றா