கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை மற்றும் சூரமலைப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பாலான பகுதிகள் முற்றிலும் அழிந்துபோன அளவிற்கு சேதம் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயத்துடன் மீட்கப்பட்டனர். 32 மாயமாகியுள்ளனர்.
இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய உத்தர விடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பேரிடர் தொடர்பான ஆர்பிஐ-யின் வழிக்காட்டுதலின்படி வங்கி கடனை மறுசீரமைக்க மட்டுமே முடியும் எனத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு நிலச்சரிவால் பாதிக்கப்பட் மக்களுக்கான துரோகம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள், நிலங்கள், வாழ்வாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து விட்டார்கள். இதுவரை, மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. மாறாக, வெறுமன கடனுக்கான மறுசீரமைப்பை மட்டுமே பெற்றுள்ளனர். இது நிவாரணம் அல்ல. இது துரோகம். இந்த அக்கறையின்மையை வன்மையாகக் கண்டித்து, வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்போம். அவர்களின் வலி புறக்கணிக்கப்படாது. நீதி கிடைக்கும் வரை எல்லா இடங்களிலும் நாங்கள் அவர்களின் குரல்களை எழுப்புவோம்” என்றார்.