அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்து வரும் நாடுகளுக்கு பதிலடியாக, அதே அளவுக்கு பதிலுக்கு பதில் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். கடந்த 2-ந் தேதி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிவிதிப்பை வெளியிட்டார். பல்வேறு நாடுகளும் வரி விதிப்பை நிறுத்துமாறு கோரியதால் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் சீனாவுக்கு மட்டும் விதிவிலக்கு இல்லை என்று கூறியுள்ளார். சீன பொருட்கள் மீது ஏற்கனவே 54 சதவீத வரி விதித்திருந்த டிரம்ப், மேலும் 50 சதவீத வரி விதித்தார். அதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 84 சதவீத வரி விதித்தது. சீனாவின் பதிலடியால் கடும் கோபம் அடைந்த, அதிபர் டிரம்ப் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 125 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். தற்போது, சீனா மீது 20 சதவீதம் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்து உள்ளார். இதனால், மொத்த வரி இப்போது 145 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சீனப் பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதமாக கடுமையாக உயர்த்துவதன் மூலம், சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் போரை டிரம்ப் தீவிரப்படுத்தியதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
