ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ நேற்று திரையரங்குகளில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார்.’வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், நிலையாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன்’ என்று நடிகை பிரியா வாரியர் அஜித் குறித்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், நடிகர் பிரசன்னா எக்ஸ் தள பக்கத்தில், “எனக்குப் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்த உன்னதமான மனிதருடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன், லவ் யூ அஜித் சார். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
