பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு
காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல – காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் 9ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
சுற்றாடல்துறை கௌரவ பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி மற்றும் காணி, நீர்பாசனத்துறை கௌரவ பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றின் பாதுகாவலர்நாயகங்கள், காணி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்களும் இதில் பங்கேற்றனர். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், வன்னித் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காணி, நீர்பாசனத்துறை பிரதி அமைச்சர், வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை குறிப்பாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
இதன் பின்னர் வனவளத் திணைக்கள பாதுகாப்புநாயகம் வடக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் விவரித்தார். குறிப்பாக முன்னைய ஆட்சியில் இது தொடர்பில் விசேட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் வவுனியா மாவட்டச் செயலர் தவிர்ந்த ஏனைய மாவட்டச் செயலர்கள் அதனை முழுமைப்படுத்தவில்லை என்றும் குற்றம்சுமத்தியிருந்தார். அத்துடன் வனவளத் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் முன்னெடுத்த முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளை முழுமையாக நியாப்படுத்தியிருந்தார்.
அவரது கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நிலைப்பாட்டை முன்வைத்தார்.
மிக நீண்ட காலப் போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களது காணிகள் ஆள்நடமாட்டம் அற்ற நிலையில் அவையே காடுகளாக வளர்ந்துள்ளன என்றும் அவற்றை கூகுள் வரைபடம் மூலமே வனவளத் திணைக்களம் வனஉயிரிகள் திணைக்களம் என்பன தமக்குரியதாக அடையாளப்படுத்தி 2012ஆம் ஆண்டின் பின்னர் அரசிதழ் வெளியிட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசிதழ் வெளியிட்டப்பட்டவை தொடர்பில் எந்தக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், போரின் பின்னர் கூகுள் வரைபடத்தை மாத்திரம் பயன்படுத்தி, கள அலுவலர்களுக்கும், பிரதேச செயலர், மாவட்டச் செயலர் ஆகியோருக்கும் தெரியாமலேயே அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதுவே தற்போதுள்ள சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது எனவும் தெளிவுபடுத்தினார்.
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன தமக்குரியதாக 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிட்ட அரசிதழ்களில் குறிப்பிடப்படும் பகுதிக்குள் மக்கள் முன்னர் வாழ்ந்தமைக்கான கட்டடங்களின் எச்சங்கள், கிணறுகளின் எச்சங்கள், வயல்கள் செய்தமைக்கான அடையாளங்கள் என்பன இப்போதும் காணப்படுகின்றன என்றும் அவை மக்களின் வாழ்விட மற்றும் வாழ்வாதார நிலங்கள்தான் என்பனவற்றுக்கு இவை சிறந்த சான்று எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதால், மக்களின் வாழ்வாதாரம், குடியேற்றம் என்பன மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகளும் திட்டமிட்ட ரீதியில் முடக்கப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தாலும் அதற்கு தீர்வு காணப்படாமல் இழுதடித்துச் செல்லப்படுகின்றது என விசனத்துடன் குறிப்பிட்ட ஆளுநர், மக்களின் காணிகளையும், அபிவிருத்திக்குத் தேவையான காணிகளையும் விடுவிப்பதே தீர்வாகும் என்பதையும் அதனை உடனடியாகச் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆளுநரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் இ.சந்திரசேகரன், ஆளுநர் குறிப்பிட்ட விடயங்கள் மிகச் சரியானது. இந்த விடயங்களால் வடக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வனவளத் திணைக்களம் முன்வைத்த காலை எப்படி பின்வைப்பது என்று யோசிக்காமல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றுக்கு எதிராக மிகக் காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். வவுனியா மாவட்டத்துக்கு சிங்கள மாவட்டச் செயலர் இருக்கின்றார். அந்த மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக சிங்களவரான நான் இருக்கின்றேன்.
அப்படியிருக்கையிலேயே எனக்குத் தெரிந்து மடுகந்த குளத்தின் கீழ் வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்த காணிகளை விடுவிப்பதற்கு மறுக்கின்றது. அது மக்கள் வயல் செய்த காணிகள். சிங்களவர்களுக்கே இவ்வாறான நிலைமை என்றால் தமிழ் மக்களின் நிலைமை சொல்லத்தேவையில்லை. இந்த நாட்டில் போர் உருவாகுவதற்கு காணிப் பிரச்சினையும் பிரதான காரணம் என்பதை மறவாதீர்கள் என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலர்கள் ஒவ்வொருவரும் தமது மாவட்டத்தில் இந்த இரு திணைக்களங்களாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைப் பட்டியல்படுத்தினர். முன்னைய ஆட்சியில் விடுவிப்பதற்கு தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் 10 சதவீதத்தையே விடுவிக்க இணங்கியமையும் சுட்டிக்காட்டிய அவர்கள் அது போதாது எனவும் குறிப்பிட்டனர். இதற்கு மேலதிகமாக, விடுவிக்க இணங்கியதைவிட பல காணிகளை புதிதாக காடுகளாக அரசிதழ் வெளியிடுவதற்கு வனவளத் திணைக்களம் கோரியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதனாலேயே முன்னைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் இணங்கிச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.
வவுனியா மாவட்டச் செயலர், கடந்த ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக இருந்தவரது அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தான் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பட்டியல்படுத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் மேலதிக விடயங்களைத் தெரியப்படுத்தினார்.
வடக்கில் மிகப்பெரும் பாரதூரமான விடயமாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றின் செயற்பாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட சுற்றாடல்துறை பிரதி அமைச்சர், இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டார். மேலும், ஜனாதிபதியின் செயலருடன் இது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. அதேநேரம், ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற வகையில் ஜனாதிபதியுடன் சந்தித்து அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் எனவும் பிரதி அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் மாவட்டச் செயலர்களால் தமது மாவட்டங்களில் விடுவிப்பதற்கு கோரிக்கை முன்வைத்த காணிகளை மீளவும் களப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.