நேட்டோ கூட்டணியில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி உக்ரைனின் இந்த முடிவுக்கு ரஷியா தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்தது. இதனை பொருட்படுத்தாமல் நேட்டோ கூட்டணி யில் இணைய உக்ரைன் தீவிரம் காட்டுகிறது. எனவே உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது.கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு போரை நிறுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இதனையடுத்து ரஷியாவை எதிர்த்து உக்ரைனும் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்தநிலையில், உக்ரைனுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகள் இங்கிலாந்து தலைமையிலான உக்ரைனுக்கான சர்வதேச நிதியம் மூலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆயிரக்கணக்கான டிரான்கள் மற்றும் டாங்கிகள் வாங்கவும் ராணுவ வாகனங்கள் பழுது பார்க்கவும் பயன்படுத்தப்பட உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய அதிபர் புதினுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை செயலாளர் ஜான்ஹுலி தெரிவித்துள்ளார்.