காங்கோவில் பல ஆண்டுகளாக அரசுக்கும், ருவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற எம்.23 என்ற கிளர்ச்சியாளர் அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலானது, உலகளவில் மனித குலத்திற்கு மிக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி மோசமடைய செய்த நிலையில், 70 லட்சம் பேர் தங்களை பாதுகாத்து கொள்ள புலம்பெயர்ந்து சென்றனர். இந்நிலையில், சமீபத்தில், கிழக்கு காங்கோவின் கோம பகுதிக்கு கிளர்ச்சியாளர்கள் முன்னேறினர். அதற்கு முன் கடந்த பிப்ரவரியில் புகாவு நகரையும் கைப்பற்றி இருந்தனர். கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில், அந்த பகுதியின் மிக பெரிய நகரான கோம பகுதியில் நடந்த மோதலில், 52 பேர் வரை கொல்லப்பட்டனர். கைஷீரோ மருத்துவமனையின் உள்ளே சென்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். இதனை உறுதி செய்த காங்கோவின் உள்துறை அமைச்சகம், கிளர்ச்சியாளர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், எம்.23 அமைப்பின் செய்தி தொடர்பாளர் லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், காங்கோ படைகள் மற்றும் அவர்களுடைய கூட்டணியினர் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இந்த தாக்குதல்களை உண்மையில் நடத்தியது யார்? என்ற விவரம் தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அச்சத்துடனேயே இருந்து வருகிறோம் என்றும் மீண்டும் போர் வந்து விடுமோ என்று பயந்து போய் இருக்கிறோம் என மக்கள் தெரிவித்து உள்ளனர்.
