ஈரானின் சிஸ்டான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மெகரிஸ்தான் மாவட்டத்தில், கார்களை பழுதுபார்க்கும் கடையில் 8 பாகிஸ்தான் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்ர்பூர் நகரை சேர்ந்த இவர்கள், வேலை முடிந்த பிறகு கடையிலேயே தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென கடைக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர், பாகிஸ்தான் தொழிலாளர்கள் 8 பேரின் கை, கால்களை கட்டி வைத்துவிட்டு, பின்னர் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தககவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொலை சம்பவத்திற்கு தடை செய்யப்பட்ட ‘பலுசிஸ்தான் தேசிய ராணுவம்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து ஈரான் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
