தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் கூறியதாவது: கூடுதலாக தொகுதி தருகிறோம்; ஆட்சியில் பங்கு தருகிறோம்; தி.மு.க. அணியை விட்டு வெளியே வாருங்கள் என்று ஆசை காட்டினார்கள். சராசரியான இந்த அரசியல் நகர்வுகளுக்கு ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இடம் கொடுத்தது இல்லை. அசைத்து பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் இருக்கும் இயக்கம் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் இல்லை. வளைந்து கொடுப்பதால் முறித்து விடமுடியும் என நினைத்தார்கள். வளைந்து கொடுப்பது எல்லாம் முறிந்துவிடாது என புரிந்து கொண்டார்கள். திருமாவளவன் மிகவும் வளைந்து கொடுப்பவன்தான். ஆனால் அவ்வளவு இலகுவாக என்னை ஒடித்து விட முடியாது. என்னை ஒரு துருப்பு சீட்டாக வைத்து தி.மு.க. கூட்டணியை உடைத்து விடலாம் என்று பலரும் கணக்கு போட்டார்கள். தோற்று போனவர்கள் இன்று மீண்டும் பழைய உத்தியை கையில் எடுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியை பா.ஜ.க. தலைமை தாங்கி வழிநடத்துகிறது என்று சொல்லக்கூடிய வகையிலே கூட்டணியை அமித்ஷா அறிவிக்கிறார். அ.தி.மு.க.தான் தலைமை தாங்குகிறது என்றால் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியை அறிவித்திருக்க வேண்டும். அப்படி அறிவித்திருந்தால், எடப்பாடி பழனிசாமி சுதந்திரமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று நாம் நம்ப முடியும். ஆனால் அவரை பக்கத்திலே உட்கார வைத்துக்கொண்டு அமித்ஷா பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
