”மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்” என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கொண்டு வந்தார். பின்னர் 110 விதிகளின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களை பாதுகாக்க அரசியலமைப்பு சட்டம் உள்ளது. கூட்டாட்சி தத்துவம் கொண்டு ஒன்றியமாக உருவாக்கினார்கள். மாநில உரிமைகள் ஒன்றன் பின் ஒன்றாக பறிக்கப்படுகிறது. உரிமைகள் காக்கப்பட்டால் தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும்.
இதனை உணர்ந்தே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை தி.மு.க., முன்னெடுத்துள்ளது. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தமிழகம் வலியுறுத்தி வருகிறது. மாநில சுயாட்சி தொடர்பாக 1971ல் அறிக்கையை ராஜமன்னார் குழு அறிவித்தது. ராஜமன்னார் குழு அளித்த பரிந்துரையின் படி, 1974ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வால் பல மாணவர்களின் மருத்துவ கனவுகள் சிதைந்துள்ளது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை மறைமுகமாக தமிழக மாணவர்கள் மீது திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது.
தமிழகம், கேரளா, மேற்குவங்க மாநிலங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். மாநில அரசின் வரி வருவாய் பறிக்கப்படுகிறது. நாம் செலுத்தும் ஒரு ரூபாய் வரியில், 29 பைசா தான் திரும்பி வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையாக 2026ம் ஆண்டு பிரதிநிதித்துவம் குறைக்கப்படுகிறது. மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய உயர் மட்ட குழு அமைப்பது அவசியமாகிறது. மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும். இக்குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அசோக்வர்தன் ஷெட்டி, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோர் இடம்பெறுவர். ஜனவரி மாத இறுதிக்குள் இடைக்கால அறிக்கை, 2 ஆண்டுகளுக்குள் இறுதி அறிக்கையை இக்குழு வழங்கும். அனைத்து மாநிலங்களின் உரிமை காக்கவே இக்குழு அமைக்கப் படுகிறது. மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வு வேண்டும் என வலியுறுத்துவது தமிழகத்தின் நலனிற்காக மட்டுமல்ல. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.