உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்க சஞ்சீவ் கன்னாவின் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன்படி உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு பி.ஆர். காவாய் அடுத்த உச்சநீதிமன்ற நீதிபதியாவது உறுதி செய்யப்படும். அதன்பின் பி.ஆர். கவாய் மே 14 இல் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார். மகாராஷ்டிராவை சேர்ந்த கவாய், பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட அமர்வில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
