வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பலர் பயன் அடைந்து வருகிறார்கள்.அந்த வரிசையில் அவர்களுக்கு மேலும் ஒரு மணிமகுடம் வழங்குவது போல, மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்! 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! இதுதான் திராவிட மாடல். என தெரிவித்துள்ளார் .