“கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் எமது தமிழ்ச் சமூகத்தை இணைக்கும் பணிகளை மாத்திரமே ஆறறிவருகின்றது”
அதன் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி புகழாரம்
(மார்க்கம் நகரிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
“கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் தமிழர் வர்த்தக சமூகத்தை உயர்த்துவதிலும் அவர்களை இணைப்பதிலும் கடுமையாக உழைத்து வரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் என்னும் பிரதான அமைப்பானது எமது தமிழ்ச் சமூகத்தை இணைக்கும் பணிகளை மாத்திரமே ஆறறிவருகின்றது ஒழிய எமது சமூகத்தை பிரிக்கும் அல்லது சீர்குலைக்கும் வேலைகளைச் செய்வதில்லை அதற்காக நான் இந்த அமைப்பிற்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் இந்த மேடையிலே தெரிவிக்கின்றேன்”
இவ்வாறு கடந்த12ம் திகதி சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்ற அதன் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கனடாவின் மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி புகழாரம் சூட்டினார்.
மேற்படி பிரமாண்டமான வைபவத்தில் சம்மேளனத்தின் தற்போதைய தலைவரும் கணக்காளருமான அரிகரன் தலைமை உரையாற்றினார். அவர் தனது உரையில் கனடாவில் தமிழர் சமூகத்தில் முக்கிய ஒரு சமூகம் சார்ந்த அமைப்பான கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் என்னும் அமைப்பின் தலைவராக உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமையடைகின்றேன். இந்த அமைப்பான வர்த்தகச் சமூகத்தின் மேம்பாட்டை மட்டுமே கருத்திற்கொண்டு செயலாற்றுவது மட்டுமன்றி முழுத் தமிழர் சமூகத்தின் தேவைகளை கருத்திற் கொண்டு செயற்பட்டு வருகின்றது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பலரது உரைகளும் இடம்பெற்றன. அவற்றில் ஒன்றாரியோ மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி மற்றும் கணக்காளர் நிமால் விநாயகமூர்த்தி மற்றும் Chapel Ridge Funeral Home Group நிறுவனத்தின் தலைவர் Eric Tappenden ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினார்கள்.
மேற்படி விழாவில் இவ்வருடத்திற்குரிய விருதுகள் 6 வெற்றியாளர்களுக்கு வழங்கப்பெற்றன.ஷ
-சிறந்த வர்த்தக வெற்றியாளர் விருது பூரணகுமார் துரைசாமி அவர்களுக்கும்-சிறந்த வர்த்தக பெண் வர்த்தக முயற்சியாளர் விருது வினோகா கண்ணன் அவர்களுக்கும்-சிறந்த இளம் வர்த்தக வெற்றியாளர் விருது கஜன் நித்தியானந்தன் அவர்களுக்கும்-சிறந்த சந்தைப்படுத்தல் வர்த்தக வெற்றியாளர் விருது பூரணி சொர்ணபால அவர்களுக்கும்-இவ்வருடத்தின் தலைவர் விருது தேவதாஸ் சண்முகலிங்கம் அவர்களுக்கும்-சிறந்த சமூக சேவையாளர் விருது தம்பையா ஶ்ரீபதி அவர்களுக்கும் வழங்கப்பெற்றன.
மேற்படி விழாவில் உள்ளுர் கலைஞர்கள் பலருக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பெற்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் அன்றை விருது விழா மேடையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் இணைந்து திரட்டிய 1 மில்லியன் கனடிய டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கான காசோலை கனடிய தமிழர் சமூக மையத்திற்கு வழங்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது