யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசத் தேவையில்லை. அங்கு இனப்பிரச்சினை பற்றிய உரையாடலுக்கு அவசியம் இல்லை என்ற ஒரு விளக்கம் பொதுவாகக் காணப்படுகிறது.இது சரியா ? இல்லை. நிச்சயமாக இல்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் எனப்படுவது உள்ளூர் நிலவரங்களைப் பிரதிபலிப்பது;உள்ளூர் உணர்வுகளைப் பிரதிபலிப்பது; உள்ளூர்த் தலைமைத்துவத்தைக் கட்டி எழுப்புவது; என்பதெல்லாம் சரிதான். ஆனால் அங்கே தேசியவாத அரசியலுக்கு இடமில்லை அல்லது தேசியவாத அரசியலை அங்கே பேசக்கூடாது என்று கூறுவது தவறான தர்க்கம்.
இது தேசியவாத அரசியல் தொடர்பான விளக்கக் குறைவினால் முன்வைக்கப்படுகின்ற ஒரு தர்க்கமாகும். தேசியவாத அரசியல் என்றால் என்ன? ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகத் திரட்டும் அரசியல்தான்.ஒரு மக்கள் கூட்டத்தை எங்கிருந்து தேசமாகத் திரட்டுவது? மேலிருந்து கீழ்நோக்கியா அல்லது கீழிருந்து மேல் நோக்கியா? நிச்சயமாக கீழிருந்து மேல் நோக்கித்தான் அதைச் செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் கிராமங்களில் இருந்துதான். அதாவது அடிமட்டத்திலிருந்துதான் மேல் நோக்கி மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும்.
அதன்படி கிராம மட்டத்திலிருந்து தான் தேசியவாத அரசியல் தொடங்குகிறது. கிராம மட்டத்தில் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் வேலைகளில் ஈடுபடுத்தவிஎல்லையென்றால் அடுத்த கட்டமாக மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் அதைச் செய்ய முடியாது.எனவே தேசியவாத அரசியலின் தொடக்கப் புள்ளியே கிராமங்கள்தான். கிராம மட்டத்தில் அதற்கான தெளிவும் விளக்கமும் தேவையான கட்டமைப்புகளும் இருக்க வேண்டும்.
கிராம மட்டத்தில் தேசியவாத அரசியல் தொடர்பாக பொருத்தமான விளக்கங்கள் இல்லை என்றால்,அது தேசிய மட்டத்தில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக கிராம மட்டத்தில் காணப்படும் சாதி,சமய, வட்டார, குறிச்சி உணர்வுகளை தேசிய மட்டத்துக்கு எடுத்துப்போக முடியாது. அதே சமயம் அதைக் கிராம மட்டத்திலேயே பேணவும் முடியாது. கிராம மட்டத்தில்தான் பால்நிலை அசமத்துவம், சாதி,சமய, உள்ளூர் அசமத்துவங்கள் ஆழமாகக் காணப்படும். அந்த அசமத்துவங்களை கிராம மட்டத்தில் நீக்கவில்லை என்றால் பின்னர் அதனை மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நீக்க முடியாது.அது மட்டுமல்ல அது தேசிய மட்டத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும்.
உதாரணமாக மன்னாரில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மத முரண்பாட்டை இங்கு சுட்டிக்காட்டலாம். திருக்கேதீஸ்வரம் வளைவு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு தேசியமட்ட உரையாடலாக பின்னர் விரிவுபெற்றது. எனவே உள்ளூரில் காணப்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை முரண்பாடுகளை உள்ளூரிலேயே தீர்க்க வேண்டும்.
தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்களைத் தேசமாகத் திரட்டிக் கட்டுவது. ஒரு தேசத்துக்குள் காணப்படக்கூடிய சாதி, சமய, பிரதேச,பால்நிலை ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து எவ்வாறு அந்த மக்கள் கூட்டத்தை ஒரு பெருந்திரளாகக் கூட்டிக் கட்டுவது? ஒரே ஒரு வழிதான் உண்டு. ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் அவர்களை ஒரு பெரிய திரளாகக் கூட்டிக்கட்டலாம். அதாவது ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது அவர்களை ஒரு பெரிய திரளாகக் கூட்டிக் கட்டலாம். அதாவது ஒரு மக்கள் கூட்டத்தை அசமத்துவங்களின் மீது கட்டியெழுப்புவது தேசியவாத அரசியல் அல்ல. மாறாக ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் அந்த மக்கள் கூட்டத்துக்குள் காணப்படக்கூடிய இன,மொழி,மதப் பல்வகைமையை ஏற்றுக்கொண்டு அப் பல்வகைமையின் மீது கட்டி எழுப்பப்படுவதுதான் தேசியவாத அரசியலாகும்.
எனவே இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் தேசியவாத அரசியலை கிராம மட்டத்திலேயே, அடிமட்டத்திலிருந்தே தொடங்க வேண்டும். எனவே கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியவாத அரசியலுக்கு இடமில்லை என்ற விளக்கம் தவறானது.
தேசியவாத அரசியல் என்பது தேசிய மட்டத்திலானது என்று விளங்கிக் கொள்ளப்படுகிறது.தேசிய அளவிலானது என்பதற்கு பதிலாக தாயக அளவிலானது என்பது விளங்கிக் கொள்ள அதிகம் இலகுவாக இருக்கும். இந்த விளக்கத்தின்படி தாயகத்தில் கீழிருந்து மேல் நோக்கி அதாவது கிராமங்களில் இருந்து தேசியவாத அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும். எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் எனப்படுவது தேசியவாத அரசியலுக்கும் உரியதுதான்.அதேசமயம் உள்ளூர் அபிவிருத்தி தொடர்பில் பொருத்தமான பொருளாதாரத் தரிசங்களைக் கொண்ட உள்ளூர் தலைமைகளைக் கட்டியெழுப்ப வேண்டும்.
உள்ளூராட்சி சபைகளில் மட்டுமல்ல மாகாண மட்டத்திலும் அதாவது மாகாண சபைகளிலும் தேசியவாத அரசியலை அதாவது இனப் பிரச்சினையை அதிகம் குவி மையப்படுத்தக்கூடாது என்று ஒரு தர்க்கம் ஏற்கனவே முன் வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக விக்னேஸ்வரனின் தலைமையிலான வட மாகாண சபையின் தோல்விகளில் அதுவும் ஒன்றாகக் கூறப்படுகிறது. விக்னேஸ்வரனிடம் மாகாணம் தழுவிய தேசிய பொருளாதார திட்ட வரைவு எதுவும் இருக்கவில்லை என்பது வேறு விடயம். தமிழ்த் தேசியக் கட்சிகளில் பெரும்பாலானவற்றிடம் தேசிய அளவிலான பொருளாதாரத் தரிசனங்கள் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆனால் அதற்காக மாகாண சபைகளில் தேசியவாத அரசியலை விவாதிக்க கூடாது என்பது சரியல்ல. அது மக்களால் ஆணை வழங்கப்பட்ட, ஒரு கொஞ்சமாவது அதிகாரங்களைக் கொண்ட ஒரு சட்டமன்றம். அங்கேயும் அபிவிருத்தி தொடர்பாகத்தான் உரையாட வேண்டும். மாறாக தேசியவாத அரசியலை முன்னிறுத்தக்கூடாது என்றும் ஒரு தர்க்கம் முன்வைக்கப்படுகிறது. உண்மை.அங்கு அபிவிருத்தி அரசியலுக்கு போதிய அளவு கவனக்குவிப்பு இருக்க வேண்டும்.ஆனால் அதற்காக தேசியவாத அரசியலை அங்கு விவாதிக்க கூடாது என்பது சரியல்ல. மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு சட்டமன்றத்தில் தான் தேசியவாத அரசியலை விவாதிக்க வேண்டும். மாகாண மட்டத்தில் தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டி எழுப்புவதற்கு அது அவசியம்.
அதே சமயம் அங்கே அபிவிருத்தி தொடர்பிலான தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலான பொருத்தமான பொருளாதாரத் தரிசனம் இருக்க வேண்டும். அரசியலில் தூய பொருளாதாரம் கிடையாது. அரசியல் பொருளாதாரம்தான் உண்டு. அரசியல் அதிகாரம் இல்லாமல் பொருளாதாரத்தை பற்றியும் அபிவிருத்தியைப் பற்றியும் உரையாட முடியாது. எனவே மாகாண சபைகளில் இனப்பிரச்சினை தொடர்பில் உரையாட வேண்டும்.குறிப்பாக வடமாகாண சபை இன அழிப்பு தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானங்கள் முக்கியமானவை. அவற்றுக்கு மக்கள் ஆணை உண்டு.
எனவே இப்பொழுது நாம் தெளிவான ஒரு முடிவுக்கு வரலாம். உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் நிலவரங்களைப் பிரதிபலிப்பவைகளாக இருந்தாலும் அவை தேசியவாத அரசியலில் இருந்து பிரிக்கப்பட முடியாத மைக்ரோ கட்டமைப்புகள் ஆகும். தேசியவாத அரசியலை உள்ளூராட்சி சபைகளில் இருந்துதான் அதாவது கீழிருந்துதான் கட்டியெழுப்ப வேண்டும். ஒரு மக்கள் மத்தியில் தேசத் திரட்சியை ஏற்படுத்துவது என்பது கீழிருந்து மேல் நோக்கியதாகத்தான் அமையலாம். எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தேசியவாத நோக்குக் கோணத்தில் இருந்துதான் அணுக வேண்டும். அங்கு பிரச்சார நடவடிக்கைகளையும் தேசியவாத நோக்கு நிலையில் இருந்துதான் முன்னெடுக்க வேண்டும்.
மாறாக, உள்ளூராட்சி சபைகள் உள்ளூர்த்தன்மை மிக்கவை என்பதனால் அவற்றிற்கு தேசியத் தன்மை இல்லை என்று கூறுவது தேசியவாத அரசியலுக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ் மக்களின் தேசியவாத அரசியலை நீர்த்துப்போகச் செய்யும் உள்நோக்கமுடைய ஒரு பிரச்சாரம்தான். எங்கிருந்து தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டுமோ, அங்கிருந்து அதைச் செய்ய வேண்டாம் என்று கூறுவது.
கிராம மட்டத்தில் கட்டமைப்புகள் இல்லையென்றால் கட்சிகள் மாகாண மட்டத்திலும் தாயக மட்டத்திலும் பெரிய வெற்றிகளைப் பெற முடியாது. தமிழ்த் தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சிக்கு உள்ள முக்கியத்துவமே அதுதான். ஊர்களில் அக்கட்சி ஒப்பீட்டு ரீதியாக ஏதோ ஒரு வலைப் பின்னலைக் கொண்டிருக்கிறது. அந்தத் துணிச்சலில்தான் சுமந்திரன் தனித்து நின்று தேர்தலில் வெல்வோம் என்று கூறி வருகிறார்.
தமிழரசுக் கட்சிக்குள் யாழ்ப்பாணத்தின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராகிய சிறீதரனின் பலம் கிளிநொச்சியில் அவருக்குள்ள கிராமமட்ட வலைப் பின்னல்தான். ஆயுத மோதலுக்கு பின்னரான வன்னிப் பெருநிலத்தின் சமூகச் சூழலும்,வன்னியின் விவசாய மையக் கிராமியக் கட்டமைப்பும் அவருக்கு வசதியாகக் காணப்படுகின்றன.
தமிழ்த் தேசியக் கட்சிகளில் வடக்கு கிழக்கில் ஒப்பீட்டளவில் பரவலான வலைப் பின்னலைக் கொண்டிருப்பது தமிழரசுக் கட்சிதான்.கிழக்கில் ஏனைய எல்லாக் கட்சிகளோடும் ஒப்பிடுகையில் தமிழரசுக் கட்சிக்கு கிராம மட்ட வலைப் பின்னல் பலமாக உண்டு.
மட்டக்களப்பில் பிள்ளையான் பிரதேச உணர்வுகளை மையமாக வைத்து கிராமமட்ட வலைப் பின்னலைக் கட்டியெழுப்பினார். அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.அவர் மட்டக்களப்பில் கிராம மட்டங்களில் கட்டமைத்து வைத்திருக்கும் கட்சி வலைப் பின்னலானது வடக்குக்கு எதிரான பிரதேச உணர்வுகளை அடித்தளமாகக் கொண்டது என்ற குற்றச்சாட்டு உண்டு. தமிழ்த் தேசியவாத நோக்கு நிலையில் அது ஆபத்தானது.அது தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதற்கு எதிரானது. அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதற்கு எதிராகச் செயல்படும் சக்திகளுக்குத் துணை போவது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அது தோற்கடிக்கப்பட்டிருந்தாலும். அத்தோல்வியானது சிறிய வித்தியாசத்தில் கிடைத்த தோல்வி.
எனவே கிராமமட்ட வலைப்பின்னல் பலமாக இருக்கும் கட்சிதான் தேசிய மட்டத்திலும் பலமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும். இந்த அடிப்படையில் பார்த்தால், கிராம மட்டத்தில் எப்படிப்பட்ட ஒரு வலைப் பின்னலைக் கட்டியெழுப்பப் போகிறோம் என்பதுதான் இங்கு முக்கியமானது.
எனவே ஒரு மக்களை தேசமாகத்திரட்டும் தேசியவாத அரசியலானது கிராமங்களில் இருந்துதான் தொடங்குகின்றது. அந்த அடிப்படையில் கூறின், அதை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இருந்தே தொடங்க வேண்டும். கிராமங்களில் தொடங்கி மாவட்ட,மாகாண,தாயக மட்டங்களுக்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்கி தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும்.