பிரதமர் மோடியுடன் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொலைபேசி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனையின் போது டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொழில் விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. எலான் மஸ்க்குடன் பேசியதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, தொழில் நுட்பம் மற்றும் புதுமை ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரங்களில் அமெரிக்காவுடனான தனது ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் செயல்திறன் நிர்வாகத்துறை தலைவராக உள்ள எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி உரையாடியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
