ஆளுனர் அனுப்பும் மசோதா குறித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிபருக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தது. மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் இது தொடர்பாக பேசும்போது, நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியதுடன், அதிபருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மாநிலங்களவை தலைவர் இதுபோன்று அரசியல் கருத்துகள் கூறியதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை என மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக கபில் சிபல் கூறியதாவது:- மக்களவை சபாநாயகர் பதவி குறித்து அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு கட்சிக்கான அவைத் தலைவராக இருக்க முடியாது. அவர் வாக்களிப்பதில்லை. வாக்கெடுப்பின்போது இருபக்கமும் சமமான நிலை ஏற்பட்டால் மட்டுமே வாக்களிக்க முடியும். இதே நடைமுறைதான் மாநிலங்களவையிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் சமநிலையாக இருக்க வேண்டாம். நீங்கள் சொல்லும் அனைத்தும் இருதரப்பிற்கும் இடையில் சமநிலையில் இருக்க வேண்டும். சபாநாயகர் ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்க முடியாது. அவர் (தன்கர்) என்று நான் கூறவில்லை, ஆனால் கொள்கையளவில் எந்த சபாநாயகரும் எந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்க முடியாது. ஒருவேளை அப்படி இருந்தால் அந்த பதவிக்கான கண்ணியம் குறைந்துவிடும். இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.
