இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 1.16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில், பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக, ஹவுதி பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. செங்கடலில் கப்பல்களை மறித்து, தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹவுதி பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா கடுமையாக தாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏமனில் உள்ள ராஸ் இசா துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் காயமடைந்தனர். ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் மற்றும் வருவாய் கொடுக்க கூடிய விசயங்களை அழிப்பது என்று அமெரிக்கா முடிவு செய்து, இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என அமெரிக்காவின் மத்திய படை தெரிவித்து உள்ளது. ஏமனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராக்கெட் தளங்கள் மீதும் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
