40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார். இந்த பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சூழலில், சென்னை, எழும்பூரில் நடைபெற்று வரும் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மதிமுகவில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்று பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது ராஜினாமாவை துரை வைகோ திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாகிகளின் வலியுறுத்தலையடுத்து துரை வைகோ ராஜினாமாவை திரும்ப பெற்றுள்ளார்.