உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, உள்நாட்டுப் போரின் போது தமிழ் பொதுமக்கள், கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் மற்றும் பாகுபாடு மற்றும் வன்முறையைச் சந்தித்த முஸ்லிம்கள் உட்பட அநீதிக்குள்ளான அனைத்து சமூகங்களுக்கும் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முஸ்லிம் அமைப்புகள் கூட்டாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் வன்முறைகளை தூண்டுவதும் தண்டனைகளின்றி விடுபடுவதும் மீண்டும் மீண்டும் வேரூன்ற காரணமாக உள்ள நிறுவனங்கள், கட்டமைப்புகள் மற்றும் அரசியல் கலாசாரம் என்பவற்றில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துமாறு பதினைந்து முஸ்லிம் அமைப்புகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் துயருற்றிருக்கும் நீண்ட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 1971, 1989ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மற்றும் அழுத்கம, ஜின்தோட்டை, திகன, மினுவாங்கொட போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அத்துடன் கோவிட்-19 காலத்தில் கட்டாய தகனம் செய்ததன் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் என எல்லாம் சமூகங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இதில் முழுமையான கரிசனை இல்லையெனில், நம்பிக்கையுடனும் முன்னோக்கியும் செல்லும் ஒரு தேசியத் தரமான கூட்டு முன்னேற்றப் பாதை என்றும் எட்டமுடியாத ஒன்றாகவே இருக்கும்.”
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்கள் மாத்திரமல்ல, இஸ்லாத்தை அவதூறு செய்வதையும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதையும், நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிடும் குறித்த முஸ்லிம் அமைப்புகள், முழு உண்மையும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் எனவும், இதில் பலிக்கடாவாக உள்ளவர்களை விடுத்து உண்மையிலேயே பொறுப்பானவர்கள் – தாக்குதலின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும், தாக்குதல் நடந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமலும், தாக்குதல்களைச் சுற்றியுள்ள முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமலும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.”
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றச்சாட்டுகள் அல்லது தண்டனைகள் இல்லாமல் முஸ்லிம் தனிநபர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுவது குறித்து முஸ்லிம் அமைப்புகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய நடைமுறைகள் அவநம்பிக்கையையும் பயத்தையும் ஆழப்படுத்தியுள்ளன என்பதை வலியுறுத்துகின்றன.
தாமதமின்றி அனைத்து விசாரணைகளையும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முடிவுக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசாங்கத்தை அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த அறிக்கையை வெளியிட்ட 15 முஸ்லிம் அமைப்புகள், கூட்டு தண்டனைக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து வந்த குழப்பமான காலங்களில் நீதிக்காக போராடிய கர்தினால் மால்கம் ரஞ்சித், கத்தோலிக்க திருச்சபை மற்றும் அனைத்து மத மற்றும் இனக் குழுக்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களது துணிச்சலும் ஒற்றுமையும் ஒருபோதும் மறக்கப்படக்கூடாதவை என வலியுறுத்தியுள்ளன.
“ஓரங்கட்டப்பட்ட குழுவாக அல்லாமல் இந்த நாட்டின் சமமான அந்தஸ்துடன் அறிவொளி பெற்ற சமூகமாக நாம் முன்னேற உறுதிபூண்டுள்ளோம். அனைத்து இலங்கையர்களும் பிரிவினை மற்றும் சந்தேகத்தையும், அவற்றை உருவாக்கும் வெளிப்புற மற்றும் உள் கூறுகளையும் நிராகரிக்கவும், சமூகங்களிடையே நம்பிக்கையை வளர்க்கவும், அமைதி, இரக்கம் மற்றும் உண்மையான தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்கவும் முன்வருமாரு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”
கூட்டு அறிக்கையை வெளியிட்ட 15 முஸ்லிம் அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகள் அதிக வெறுப்பு மற்றும் அநீதியால் மதிக்கப்படக்கூடாது எனவும், மாறாக உண்மை மேலோங்கி நிற்கும், நீதி நிலைநாட்டப்படும், மேலும் ஒவ்வொரு குடிமகனும் – இன மத பேதமின்றி – கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு நாடாக இலங்கை மாறுவதை உறுதி செய்வதன் மூலம் கௌரவிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளன.
ஏப்ரல் 21, 2019 அன்று பல தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளில். கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம், கொழும்பு-கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டன.
ஏப்ரல் 21, 2019 அன்று தெஹிவளை ஹோட்டல் மற்றும் கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி, ஷங்க்ரி-லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்கள் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 268 பேர் கொல்லப்பட்டதோடு 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.