மதுரையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியது. இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என 2 வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதேபோல் அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார்.
11-ந்தேதி மதுரை மூன்றுமா வடியில் எதிர்சேவை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். முன்னதாக சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, சேகர் பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்தநிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.