மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(22-04-2025)
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் அதை கவனத்தில் எடுக்கவில்லை. ஐ.நா.சபை தீர்மானத்தை உடனடியாக கூறினீர்கள் அதை அமுல் படுத்த முடியாது என்று. இது தான் தமிழர்கள் மீது நீங்கள் காட்டுகிற அக்கறை யா?. என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு 22-04-2025 அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்து கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
-மன்னார் மாவட்டத்தில் உள்ள நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் திறமையானவர்களாக காணப்படும் நிலையில் குறித்த சபைகளை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும்.
ஜே.வி.பி.அரசாங்கம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஜனாதிபதி கடந்த வாரம் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மன்னார் வருகை தந்து உரை நிகழ்த்தினார். உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது உள்ளுராட்சி சபைகளை ஆட்சி அமைப்பது தமது கட்சியாக மாத்திரம் இருந்தால் எவ்வித பாரபட்சம் இன்றி நிதியை ஒதுக்குவதாக தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றி மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதே அவரின் செய்தியாக உள்ளது.அவரது கருத்தை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்த்தார்கள். இலஞ்சத்தை கொடுத்து ஜனாதிபதி மக்களை ஏமாற்றுகிறார்.
எனவே ஜனாதிபதி அவர்கள் எவ்வாறு இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும். ஜனாதிபதிக்கு ஆதரவாக அமைச்சர் விமல் ரத்நாயக்க ஒரு படி குரலை உயர்த்தி கூறுகிறார் ஜனாதிபதியினுடைய கூற்றிற்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் அருகதையற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஜனாதிபதியின் கட்சிக்கு அதிக அளவான ஆசனங்களை வடக்கு மக்கள் வழங்கி உள்ளனர்.
அதை வைத்துக் கொண்டு தமிழ்த் தலைமைகள் பேசுவதற்கு வல்லமை அற்றவர்கள் என்று சொல்லுவதற்கு விமல் ரத்நாயக்க வுக்கு என்ன யோக்கியம் உள்ளது என்று நான் கேட்க விரும்புகின்றேன்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தினீர்களா?, தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் நீங்கள் அதை கவனத்தில் எடுத்தீர்களா? ஐ.நா.சபை தீர்மானத்தை உடனடியாக கூறினீர்கள் அதை அமுல் படுத்த முடியாது என்று. இது தமிழர்கள் மீது நீங்கள் காட்டுகின்ற அக்கறையா?.
பாராளுமன்றத்திலும்,வெளியிலும் அரசியல் கைதிகள் சிறைகளில் இல்லை என்று கூறினார்கள். இது தான் நீங்கள் தமிழர்கள் மீது காட்டுகின்ற அக்கரை?. தமிழ் தலைவர்கள் அதற்கு எல்லாம் குரல் கொடுத்தால் நீங்கள் பேச முடியாது என அதிகார வர்க்கத்துடன் தெரிவிக்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்க்கும் வகையில் தென் பகுதியில் சிங்கள தலைவர்கள் வாரி தூற்றுகின்ற நிலையில் அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களை பார்த்து எதுவுமே கதைக்கவில்லை.
ஆனால் தமிழ் தலைவர்களை பார்த்து அவர் கூறுகிறார் நாங்கள் கரைப்பதற்கு அருகதை யற்றவர்களாம். எனவே எங்களை பற்றி கதைப்பதற்கு விமல் ரத்நாயக்க வுக்கு எந்த அருகதையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் உயர் பீட உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.