நடிகர் மகேஷ் பாபு வருகிற 27-ம் தேதி ஐதராபாத் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.எஸ்.எம்.பி 29 எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சுரானா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் விளம்பர தூதராக மகேஷ் பாபு உள்ளார். இந்த நிறுவனங்களின் மீது பண மோசடி, ஒரே இடத்தை பலருக்கு விற்றது, ஒப்புதல் அளிக்காத வீடுகளை விற்பனை செய்தது உள்ளிட்ட புகார்கள் எழுந்தநிலையில், அங்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக மகேஷ் பாபுவிற்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வருகிற 27-ம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக மகேஷ் பாபு ரூ.5.9 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் ரூ.3.4 கோடி காசோலையாகவும் ரூ.2.5 கோடி பணமாகவும் வாங்கியதாக தெரிகிறது.