அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அதனை முடித்து வைத்து விட்டதாக தெரிவித்ததை ஏற்றுக் கொண்டு அந்த வழக்கை மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், முதன்மை அமர்வு மீண்டும் அதே விவகாரத்தை எடுக்க அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் அவர், அமைச்சரின் முழுமையான பேச்சை கேட்காமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு குறித்து அமைச்சர் உள் அரங்கத்தில் பேசிய விவகாரம் தான் இது என்றும் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கள், இரு சமயத்தினரின் மனதை புண்படுத்தியுள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது. இந்தப் பேச்சுக்காக அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிஷ்டவசமானது என நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.