தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை விநாயக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி இவர்களில் யாராவது ஒருவர் இயக்குவார்கள் என கூறப்பட்டு வந்தது. இருப்பினும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், அதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து தனுஷின் ‘3’ படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.