பு.கஜிந்தன்
தரம் 7 இல் கல்விபயிலும் பாடசாலை மாணவன் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22.04.2025) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சிவரூபன் லோஷனன் என்ற 12 வயதுடைய மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையின் அருகாமையில் குறித்த சிறுவன் சென்ற நிலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் தன்னை மோதியதில் தான் துவிச்சக்கர வண்டியுடன் வீதியில் வழு்ந்ததாக சிறுவன் தெரிவித்தார்.
அத்துடன் விபத்தில் சிக்குண்டு காயங்களுடன் வீழ்ந்து கிடந்த தன்னை பெருட்படுத்தாது அந்தப் பெண் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வீழ்ந்துகிடந்த தன்னை தனது பாடசாலையின் முன்பாக வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிரேஸ்ட மாணவர்கள் ஓடிவந்து தூக்கி தனது நிலையை அவதானித்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவன், தனக்கு பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து தனது பெற்றோருக்கு தகவல் வழங்கியதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் குறித்த விபத்தில் மாணவனின் கை முறிந்த நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவனை தனது மோட்டார் சைக்கிளால் மோதி காயப்படுத்திய பெண்ணைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க பாடசாலை நிர்வாகமோன அன்றி சமூக அக்கறை கொண்ட அமைப்புக்களோ முன்வரவில்லை என்பதை பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் முன்வைத்துள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நிறைவுறும் நேரங்களில் பொலிசார் வீதிக் கடமையில் வழமையாக இருந்துவரும் நிலையில் சில நாள்களாக அந்த செயற்பாடுகள் இல்லாதுள்ளமையை அவதானிக்க முடிவதாக மாணவர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பித்தக்கது.